கவரப்பேட்டை ரயில் விபத்து ரயில்வே ஐஜி நேரில் ஆய்வு

கும்மிடிப்பூண்டி: கவரப்பேட்டையில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த ரயில் விபத்து குறித்து புதிதாக பொறுப்பேற்றுள்ள ரயில்வே ஐஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார். கும்மிடிப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட கவரப்பேட்டை ரயில் நிலையத்தையொட்டி 500 மீட்டர் தொலைவிலுள்ள லூப்லைன் வழியாக கடந்த ஆண்டு அக்டோபர் மைசூரில் இருந்து சென்னை வழித்தடம் மார்க்கமாக வந்த தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிலர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து தொடர்பாக தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ரயில் தண்டவாள லூப்லைனில் உள்ள போல்டுகளை கழற்றிய காரணமாகத்தான் இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இது சம்பந்தமாக தெற்கு ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

ஆனால் இதில் இதுநாள் வரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என்பதால், கவரப்பேட்டை – பொன்னேரி ஆகிய ரயில் நிலையங்களில் ரயில் விபத்து குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் எனவும், கொடுக்கப்படும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் ரயில்வே போலீசார் ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைத்தனர்.

இந்தநிலையில் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே விபத்து நடந்த இடத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ரயில்வே ஐஜி பாபு மற்றும் ரயில்வே அதிகாரிகள் நேற்று மதியம் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது எத்தனை போல்டுகள் கழற்றப்பட்டன என ஐஜி பாபு, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இது சம்பந்தமாக விசாரணை துரிதப்படுத்தப்படும் என அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.

The post கவரப்பேட்டை ரயில் விபத்து ரயில்வே ஐஜி நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: