மன அழுத்தத்தால் விபரீத முடிவு 8 வயது மகளின் கழுத்தை அறுத்த தாய் தற்கொலை: 5 மாத குழந்தையையும் நெரித்து கொல்ல முயற்சி

சென்னை: மன அழுத்தம் காரணமாக 8 வயது மகளின் கழுத்தை அறுத்துவிட்டு, 5 மாத குழந்தையின் கழுத்தை நெரித்து, தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேனாம்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உரிய நேரத்தில் 2 குழந்தைகள் மீட்கப்பட்டதால் உயிர் பிழைத்தனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (38), வடபழனியில் உள்ள பிரபல சினிமா ஸ்டூடியோ ஒன்றில் டெக்னீஷியனாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சரவணன், தனது பெற்றோர் சம்மதத்துடன் ஜெயந்தி (33) என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2 ஆண்டுகளுக்கு பிறகு சரவணன் தனது மனைவியுடன் சென்னை தேனாம்பேட்டை வெங்கட்ராமன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 2வது தளத்தில் குடியேறினார். தற்போது சரவணன் மற்றும் ஜெயந்தி தம்பதிக்கு 8 வயதில் பெண் குழந்தை ஒன்றும், 5 மாதத்தில் மற்றொரு பச்சிளம் குழந்தையும் உள்ளது. ஜெயந்தி மன அழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

வழக்கம் போல் நேற்று காலை சரவணன் வேலைக்கு சென்றுவிட்டார். ஜெயந்தி தனது மகள் மற்றும் 5 மாத குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது ஜெயந்திக்கு மன அழுத்தம் அதிகரித்ததால், வீட்டில் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து தனது மூத்த மகளின் கழுத்தை அறுத்துள்ளார். உடனே சிறுமி வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டுள்ளார். மகள் வலி தாங்க முடியாமல் அழுவதை உணர்ந்த ஜெயந்தி, மேலும் அவரது கழுத்தை அறுக்காமல், தனது 5 மாத குழந்தையின் கழுத்தை நெரித்துவிட்டு, ஜெயந்தி புடவையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பின்னர், தனக்கு தானே கழுத்தை அறுத்துக் கொண்டார். அப்போது, புடவை கிழிந்ததால், அருகில் இருந்த 200 லிட்டர் தண்ணீர் டேங்க்கில் தலைகீழாக விழுந்துள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டை சேர்ந்த நவ்ஷத் ஓடி வந்து கதவை தட்டியுள்ளார். அப்போது, கழுத்தில் ரத்த காயத்துடன் 8 வயது சிறுமி கதவை திறந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது, ஜெயந்தி கழுத்து அறுப்பட்ட நிலையில் ரத்தம் வீடு முழுவதும் பரவி இருந்தது. சிறுமி மற்றும் 5 மாத குழந்தை ஆபத்தான நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே சம்பவம் குறித்து பொதுமக்கள் தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன்படி விரைந்து சென்ற போலீசார் பொதுமக்கள் உதவியுடன் 8 வயது சிறுமி மற்றும் 5 மாத குழந்தையை மீட்டு எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 2 குழந்தைகளுக்கும் உரிய நேரத்தில் டாக்டர்கள் சிகிச்ைச அளித்ததால் உயிர்தப்பினர். அதேநேரம், கழுத்தை அறுத்து கொண்ட ஜெயந்தியை ஆம்புலன்சில் வந்த ஊழியர்கள் பரிசோதனை செய்த போது, அவர் கழுத்தில் இருந்து அதிகளவில் ரத்த வெளியேறியதால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து போலீசார் ஜெயந்தி உடலை மீட்டு ராயப்ேபட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து போலீசார் ஜெயந்தியின் கணவர் சரவணனுக்கு தகவல் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த அவரது கணவர், தனது மனைவி உடலை பார்த்து கதறி அழுது துடித்தார். பிறகு மருத்துவமனையில் உள்ள தனது 2 குழந்தைகளையும் நேரில் சென்று பார்த்து கண்ணீர் விட்டார். தற்போது இரண்டு குழந்தைகளும் நலமாக உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜெயந்தி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு என்ன காரணம், மன அழுத்தம் மட்டுமே காரணமா அல்லது வேறு ஏதேனும் குடும்ப பிரச்னையா என கணவர் சரவணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  அதேநேரம் போலீசார் ஜெயந்தி வசித்து வந்த குடியிருப்பில் விசாரணை நடத்தினர், அப்போது குடும்ப செலவுக்கு 2 லோன் எடுத்துள்ளதாகவும், இதுதொடர்பாக அடிக்கடி கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்ததால், ஜெயந்தி கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிவித்ததாக தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இளம் பெண் ஒருவர் மன அழுத்தம் காரணமாக தனது குழந்தைகளை கழுத்தை அறுத்தும், நெரித்தும் கொலை செய்ய முயன்று, தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழ்ப்பாக்கத்தில் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பெண் ஒருவர், தனது மகனை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தனக்கு தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மன அழுத்தத்தால் விபரீத முடிவு 8 வயது மகளின் கழுத்தை அறுத்த தாய் தற்கொலை: 5 மாத குழந்தையையும் நெரித்து கொல்ல முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: