சமூக ஆர்வலர் ஜகபர்அலி கொலை வழக்கு தாசில்தார், ஆர்ஐ, விஏஓ பணியிட மாற்றம்: கலெக்டர் அதிரடி உத்தரவு

திருமயம்: சமூக ஆர்வலர் ஜகபர்அலி கொலை வழக்கில் தாசில்தார் புவியரசன், ஆர்ஐ செல்வம், விஏஓ முருகராஜ் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து புதுக்கோட்டை கலெக்டர் நேற்று உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜகபர்அலி (58). கடந்த 17ம் தேதி கல்குவாரி உரிமையாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதில் முறையான விசாரணை மேற்கொள்ளாத திருமயம் இன்ஸ்பெக்டர் குணசேகரன் நேற்றுமுன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட ஜகபர்அலி கடைசியாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, திருமயம் தாசில்தார் புவியரசன் மீது குற்றம் சாட்டியிருந்தார். இது ஜகபர் அலி கொலை சம்பவத்தின் போது பரபரப்பாக பேசப்பட்டிருந்த நிலையில் தாசில்தார் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என கருத்து நிலவி வந்தது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவின் பேரில், திருமயம் தாசில்தார் புவியரசன் புதிதாக உருவாக்கப்பட்ட நெடுஞ்சாலை திட்டங்கள் தனிவட்டாட்சியராக மாற்றப்பட்டுள்ளார். ஆலங்குடி தனி வட்டாட்சியராக இருந்த ராமசாமி, திருமயம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் விராலிமலை தாசில்தார் கருப்பையா, அகதிகள் மறுவாழ்வு தனி வட்டாட்சியர் ரமேஷ், ஆவுடையார் கோயில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங், காவிரி வைகை குண்டாறு இணைப்பு தனி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், ஆலங்குடி தனி வட்டாட்சியர் ராமசாமி ஆகிய 5 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் புதுக்கோட்டை தனி வாருவாய் ஆய்வாளர் (கனிமங்கள்) செந்தில்நாதன், புதுக்கோட்டை தனி வருவாய் ஆய்வாளர் (வரவேற்பு) செந்தில்குமார், திருமயம் சரக வருவாய் ஆய்வாளர் செல்வம், குன்னன்டார்கோயில் சரக வருவாய் ஆய்வாளர் சபிதா ஆகிய 4 பேரும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதில் திருமயம் தாசில்தார் புவியரசன், திருமயம் வருவாய் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நடைபெற்ற கனிமவள கொள்ளை தொடர்பாக புகார் கொடுத்ததின் பேரில் சமூகஆர்வலர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதே போல் துளையானூர் விஏஓ முருகராஜ் துறை ரீதியான நடவடிக்கை அடிப்படையில் கந்தர்வகோட்டை தாலுகா பகுதிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

The post சமூக ஆர்வலர் ஜகபர்அலி கொலை வழக்கு தாசில்தார், ஆர்ஐ, விஏஓ பணியிட மாற்றம்: கலெக்டர் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: