கூடலூர், ஜன. 25: தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் திடீர் காய்ச்சல்கள் பரவி வருகிறது. இதனால் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் கொடுத்துள்ளனர். சமீப நாட்களாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் வெயில், பனி, மழை என கால சீதோஷண நிலை மாறி மாறி வருகிறது. இந்த திடீர் மாற்றங்களால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல், காய்ச்சல் என ஏராளமான மக்கள் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக சென்று வருகின்றனர். வழக்கத்திற்கு மாறாக கால சீதோஷண நிலை மாறி வருவதால் இது போன்ற நோய் உருவாகிறது.
எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் குப்பைகள் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். விரைவில் செரிமானமாக கூடிய சுத்தமான உணவுகளை உண்ண வேண்டும். உணவு உண்ணும் கைகளை நன்கு கழுவ வேண்டும். அதுபோல் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும் என நகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இவ்வாறு பாதிப்புக்குள்ளாகுபவர்கள் தாங்களாகவே மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளாமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
The post கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் குடிநீரை காய்ச்சி குடிக்க சுகாதாரத்துறை வேண்டுகோள் appeared first on Dinakaran.
