அதனைத் தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. நேற்று மார்கழி மாத ஆருத்ரா தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் இன்று மதியம் நடைபெறுகிறது. அதனையொட்டி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் நடராஜ மூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. விபூதி, பால், தயிர் இளநீர், தேன், பழச்சாறு, பஞ்சாமிர்தம், பழ வகைகள், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், சொர்ண அபிஷேகமும் நடந்தது.
அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த மகா அபிஷேகத்தில் உள்ளூர், வெளியூர், வெளி மாநிலம், வெளிமாவட்டம், வெளிநாட்டைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜ மூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருவாபரண அலங்காரம், சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறுகிறது. சித்சபையில் உத்சவ ஆச்சாரியாரால் ரகசிய பூஜை நடத்தப்பட்டு, பின்னர் மதியம் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது.
அதை அடுத்து பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளும் நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் நடனப்பந்தலில் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி ஆருத்ரா தரிசனம் கொடுக்கின்றனர். அதனைத் தொடர்ந்து சித்சபா பிரவேசம் எனும் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
* திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கொங்கு ஏழு சிவதலங்களுள் முதன்மை வாய்ந்த சிவஸ்தலமான லிங்கேசுவரர் கோயிலில் இன்று காலை ஆருத்ரா தரிசனவிழா நடந்தது. இதையொட்டி இன்று, அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை நடராஜருக்கும், சிவகாமி அம்மனுக்கும் மகா அபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் விபூதி, வெண்ணெய், அன்னம், பஞ்சகவ்யம், சந்தனாதி தைலம், நெல்லிப்பொடி, பாசிப்பயிறு மாவு, வில்வப்பொடி, நெல்லிப்பொடி, அரிசி மாவு, திருமஞ்சனம், மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், நெய், தேன், கரும்புசர்க்கரை, எலுமிச்சை, இளநீர், சந்தனம், பன்னீர், சங்காபிஷேகம், சொர்ணாபிஷேகம் உள்ளிட்ட 32 வகை திரவியங்களால் ஆடல்வல்லானுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் அந்திமந்தாரை, சம்பங்கி, தாமரை, வேர், ஏலக்காய், வெட்டிவேர், மருகு, மயிற்கண், திராட்சை, செவ்வந்தி, விருட்சப்பூ ஆகிய மலர்களை கொண்டு நடராஜ பெருமானுக்கும், சிவகாமி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்திருந்தனர். இதையடுத்து காலை 9 மணிக்கு நடராஜ பெருமானும், சிவகாமி அம்மனும் தேரில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
* ராமேஸ்வரம்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று அதிகாலை நடராஜரின் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறந்து 3 மணிக்கு ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. பின் ராமநாதசுவாமி சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதியில் திருப்பள்ளியெழுச்சி பூஜைகள் நடைபெற்றன.
அதிகாலை 3:30 மணியளவில் மூன்றாம் பிரகாரம் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள சபாபதி சன்னதியில் சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றன் இதை தொடர்ந்து மாணிக்கவாசகர் உலா நடைபெற்றது. 4.30 மணிக்கு சன்னதி முன்பு கட்டப்பட்டிருந்த 7 திரைகள் விலக்கப்பட்டன. 5.20 மணிக்கு சபாபதி சன்னதி முன்பு மாணிக்கவாசகர் பாடல் பாடப் பெற்றது. அதன்பின் திரை விலகியதை தொடர்ந்து நடராஜர் தங்கக்கவச அணிந்த ஆருத்ரா தரிசனக் கோலத்தில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
The post சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா: நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு மகா அபிஷேகம் appeared first on Dinakaran.
