குன்னூர்: ரெட் டாக்சி, ஓலா உட்பட கார்ப்பரேட் டாக்சி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வருவதை தடுக்க வலியுத்தி குன்னூரில் வலியுறுத்தி அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் சுற்றுலா நகரம் என்பதால், தினமும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்காக இங்குள்ள சுற்றுலா வாகனங்களை எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் ரெட்டாக்சி, ஓலா, ஊபர் உட்பட பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்த டாக்சிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வரத் துவங்கி உள்ளன. இது போன்று வரும் கார்ப்பரேட் டாக்சிகள் இங்கு சுற்றுலா பயணிகளை இறக்கிவிட்டு செல்வதில்லை.
மாறாக, அங்கிருந்து வரும் போதே நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களையும் சுற்றி காண்பிப்பதற்காக பேக்கேஜ் முறையில் வாடகை பேசி வந்து விடுகின்றனர்.இங்கு வரும் அவர்கள் பல்வேறு சுற்றுலா தலங்களையும் சுற்றி காண்பித்துவிட்டு, திரும்ப அழைத்து செல்கின்றனர். இது போன்ற வாகனங்கள் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல ஏற்றதாக உள்ளதால், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் தற்போது இது போன்று பேக்கேஜ் முறையில் நீலகிரிக்கு வந்து சுற்றி பார்த்துவிட்டு திரும்பி செல்கின்றனர். இதனால், இங்குள்ள சுற்றுலா வாகன ஓட்டுநர்களுக்கு போதுமான சவாரி கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர். ஆண்டு தோறும் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை வரி செலுத்தும் இவர்கள்,மாதந்தோறும் வாகனத்திற்கான கடன் உள்ளிட்டவை கூட கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரெட் டாக்சி மற்றும் ஓலா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்த டாக்சிகளை நீலகிரி மாவட்டத்தில் வர அனுமதிக்க கூடாது. அப்படி வந்தாலும் அவர்கள் இங்கு சுற்றுலா பயணிகளை இறக்கவிட்டு சென்று விட வேண்டும். சுற்றுலா தலங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்லக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று குன்னூர் உட்பட அனைத்து தாலுக்காவில் உள்ள அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் வாகனங்களை திருப்பி திருப்பி நிறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
The post கார்ப்பரேட் நிறுவனத்தை கண்டித்து சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் அடையாள வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.