- சட்டசபை
- Duraimurugan
- கவர்னர்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சபாநாயகர்
- Appavu
- மாரிமுத்து
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- தின மலர்
பேரவையில் ஆளுநர் உரை மீதுநன்றி தெரிவித்து உறுப்பினர்கள் நேற்று பேசினர். மதியம் 3.30 மணி வரை அவையில் அமர்ந்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவையில் இருந்து வெளியில் சென்றார். அப்போது. சபாநாயகர் அப்பாவு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் மாரிமுத்துவை பேச அழைத்தார். அவரும் பேசுவதற்காக எழுந்து அவைத்தலைவருக்கு வணக்கம் சொன்னார். அப்போது இடை மறித்த அவை முன்னவர் துரை முருகன், அரசு அதிகாரிகள் மீது புகார் ஒன்றை அவையில் தொடுத்தார்.
அவை முன்னவர் துரைமுருகன்: இந்த அவையில் உறுப்பினர்கள் பேசும் போது, அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அந்தந்த துறையின் அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். அதற்காக அந்தந்த துறையின் அதிகாரிகளும் இங்கே வரிசையாக அமர்ந்திருப்பார்கள். இது மரபு. ஆனால் இங்கே இப்போது எந்த அதிகாரியும் இல்லை, அவர்கள் உட்காரும் இடம் காலியாக இருக்கிறது. அவர்கள் இந்த அவையை மதிக்க வேண்டும்.
அவைத் தலைவர் அப்பாவு: முதல்வர் மற்றும் அமைச்சர் இருக்கும் வரையில் அதிகாரிகள் இருந்தனர். அவர்களுக்கு பதிலாக வேறு ஆட்கள் இருக்கிறார்கள்.
அதிமுக உறுப்பினர் உதயகுமார்: அவை முன்னவர் அதிகாரிகள் குறித்து இங்கு தெரிவித்தார். இன்னும் அதிகாரிகள் வரவில்லை.
அவைத் தலைவர் அப்பாவு: நடவடிக்கை எடுக்கிறேன். அவர்கள் நாளை முதல் வருவார்கள்.
இந்த நிகழ்வின் காரணமாக அவையில் இருந்த பெரும்பாலான உறுப்பினர்கள், அதிகாரிகளின் நடவடிக்கை குறித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
* முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு நோய் சிகிச்சைக்கு ரூ.16 கோடியில் ஊசியா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தமிழக சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு நன்னிலம் தொகுதி உறுப்பினர் காமராஜ் (அதிமுக) பேசியதாவது: எனது தொகுதியில் சவுந்தர்யா – மதியழகன் தம்பதியின் குழந்தை வர்ணிகா ஸ்ரீ முதுகெலும்பு தசைநார் வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோயிலிருந்து குழந்தையைக் காப்பாற்ற செலுத்த வேண்டிய ஊசியின் மதிப்பு ரூ.16 கோடி என மருத்துவர்கள் சொல்வதாக பெற்றோர்கள் கூறுகிறார்கள். குழந்தையை வைத்துக்கொண்டு பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்: நாமக்கல் மாவட்டத்தில் ஒன்று, தஞ்சை மாவட்டத்தில் ஒன்று என்று இதுபோன்று பாதிப்புகளும், அதற்கு ஊசி அமெரிக்காவில் இருக்கிறது. அது ரூ.18 கோடி என்று வசூலே நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த நோய்க்கான மருந்து என்பது வெளிநாட்டிலும் இல்லை, ஓர் ஊசி என்பது ரூ.18 கோடியும் இல்லை. அந்த தம்பதியினரை இங்கே வரவழைத்தால், சிகிச்சைகளை எல்லாம் செய்து தரலாம்.
அதிமுக உறுப்பினர் பி.தங்கமணி: பெங்களூரு மருத்துவமனையில் ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி குழந்தைக்கு போடப்பட்டது.
உடனே, அமைச்சர் மா.சுப்பிரமணியன், ரூ.16 கோடிக்கான ஊசி எங்கும் இல்லை என்று மீண்டும் மறுத்தார். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
* தமிழகம் முழுவதும் 6,353 வகுப்பறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது: அமைச்சர் தகவல்
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி (பாஜ) பேசியதற்கு பதில் அளித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 7,500 கோடி ரூபாயில் இதுவரைக்கும் 3,497 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ‘ 7,556 வகுப்பறைகளை இதுவரைக்கும் முதல்வர் திறந்து வைத்திருக்கிறார். இப்போது தமிழகம் முழுவதும் 6,353 வகுப்பறைகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. 351 ஆய்வகங்களும், 350 கழிவறைகள் கட்டப்பட்டு வருகிறது. எனவே எங்கெங்கு கூடுதலாக பள்ளி கட்டிடங்கள் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
* வீட்டு வசதி வாரியம் கட்டிய வீடுகளில் விற்காத வீடுகளை வாடகை வீடுகளாக மாற்ற நடவடிக்கை: அமைச்சர் முத்துசாமி தகவல்
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது .இனிகோ இருதயராஜ் (திமுக) பேசியதற்கு பதில் அளித்து அமைச்சர் சு.முத்துசாமி பேசியதாவது: 100 வீடுகள் இருக்கிற இடத்தில், தற்போது 300 வீடுகள் கட்டக்கூடிய நிலைமை இருக்கிறது. அவ்வாறு கட்டினால், அதற்கேற்ப கேட்பு இருக்குமா, விலை போகுமா என்பதையும் நாம் பார்க்க வேண்டும். திமுக அரசு பதவியேற்றபோது, ஏறத்தாழ 6,293 வீடுகள் விற்கப்படாமல் இருந்தன. அவை கட்டப்பட்டு, நீண்ட நாட்களாக விற்கப்படாமல், பயன்படுத்தப்படாமல் இருந்தன. அதற்கென தனி முயற்சி எடுத்து, அதில் 2,512 வீடுகள் விற்கப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள விற்கப்படாத வீடுகளை வாடகை வீடுகளாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இனிமேல் வருகிற திட்டங்களை, பொதுமக்கள் உடனடியாக பெற்றுக்கொள்கிற ஒரு சூழ்நிலை இருக்க வேண்டும் ஆய்வு செய்வதில் சற்று காலதாமதம் ஏற்பட்டுவிடுகிறது. எனவே, போதிய கேட்பு இருந்தால், நிச்சயமாக உறுப்பினர் கோரிய அந்தத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றார்.
The post அதிகாரிகள் சட்டமன்றத்தை மதிப்பதில்லை: துரைமுருகன் புகார் appeared first on Dinakaran.