×

அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இடம்பெற்ற பகுதிகள் மட்டுமே பேரவை அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட வேண்டும்: தீர்மானத்தை முன்மொழிந்து அமைச்சர் துரைமுருகன் பேச்சு

சென்னை: சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் பேசியதாவது: 2023ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி ஆளுநர் பேரவையில் உரையாற்றியபோது, ஏற்கனவே அவரால் ஒப்பளிக்கப்பட்டு, பேரவையில் உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட அச்சிடப்பட்ட உரையில் இடம்பெற்றுள்ள சில பகுதிகளை வேண்டும் என்றே விடுத்தும், அச்சிடப்படாத சில பகுதிகளை சேர்த்தும் உரையாற்றினார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கண்ணியத்தையும், மாட்சிமையையும், சிறப்பையும் காக்கின்ற வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து, பேரவைத் தலைவரின் இசைவோடு, மூத்த மொழியாம் நம் இனிய தாய்மொழியில் தமிழில், தீர்மானத்தை மொழிந்தது, ஆளுநருக்கு அப்போது புரிந்திருக்காது. 2024ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி ஆளுநர் பேரவையில் உரையாற்றுகையிலும், இதே முறையை தொடர்ந்ததால் அன்றைக்கு என்னால் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட அது இப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.முன்னாள் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பேரவையின் நூற்றாண்டு விழா 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் நாள் நடைபெற்றபோது அனுப்பிய வாழ்த்து செய்தியை இங்கே நினைவு கூர்கிறேன். இவ்வளவு பெருமை கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் புகழ் மங்கி விடாமல் பாதுகாத்து நிற்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு ஆளுநர் பதவி குறித்து மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், ஆளுநர் பதவி உள்ள வரை, அப்பதவியில் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருக்குரிய மரியாதை அளிக்கப்பட வேண்டுமென்ற கருத்து கொண்டவர். கலைஞருடைய வழித்தடங்களைப் பின்பற்றி ஆட்சி புரிகிற நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் நாம் மரபு மீறக்கூடாது என்ற பண்போடு ஆளுநர் உரைக்காக பேரவையைக் கூட்ட யோசனை வழங்கினார்.

மீண்டும் ஆளுநர் முந்தைய ஆண்டுகளில் செய்துள்ளதையே திரும்பச் செய்திருக்கிறார். இந்த அவையில் பின்பற்றப்படும் மரபின் அடிப்படையில் ஆளுநர் உரையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், உரையின் நிறைவில் தேசிய கீதமும் பாடப்படுவதே பின்பற்றப்பட்டு வருவதை தெளிவாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மீண்டும் இன்று அதையே ஒரு பிரச்னையாக ஆளுநர் குறிப்பிட்டு, அவர் அரசு அனுப்பிய உரையைப் படிக்காமல் சென்று விட்டது, அவரது உண்மையான நோக்கம் என்ன என்பதைக் கேள்விக்குறியாக்குகிறது. இந்நாட்டின்மீதும், தேசிய கீதத்தின்மீதும் பெரும் மதிப்பை தமிழ்நாட்டு மக்களும், இந்தப் பேரவை உறுப்பினர்களும் என்றென்றும் கொண்டுள்ளார்கள். தேசிய ஒருமைப்பாட்டிலும், நாட்டுப் பற்றிலும், தேசத் தலைவர்கள் மீதும் என்றும் மாறாத நன்மதிப்பினைக் கொண்டது இந்த அரசு. திமுகவின் உண்மைச் சீடராக, திராவிடச் சமூகத்திலிருந்து உதித்த சுயமரியாதைக் கனலாக செயல்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டிக் காத்து வரும் இச்சட்டமன்றப் பேரவையின் மாண்பினை நிலைநாட்டிடும் வகையில்-பேரவைத் தலைவரின் இசைவோடு, சட்டமன்றப் பேரவை விதி 17-யை தளர்த்தி இது தொடர்பான ஓர் தீர்மானத்தினை முன்மொழிகிறேன்.

தமிழ்நாடு அரசால் விதிகளின்படி அனுப்பி வைக்கப்பட்ட ஆளுநர் உரையைப் படிக்காமல் சென்றுவிட்டார். எனவே, இந்தியாவில் உள்ள பிற சட்டமன்றப் பேரவைகளுக்கு மட்டுமல்லாது, உலக அளவில் உள்ள சட்டப்பேரவைகளுக்கும் எடுத்துக்காட்டாகவும், நூறாண்டு வரலாற்றுப் பெருமைகொண்ட இம்மாமன்றத்தின் மக்களாட்சி மாண்பினை உயர்த்திப் பிடிக்கவும், மரபைக் காத்திடவும், அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள பகுதிகள் மட்டுமே அவைக்குறிப்பில் பதிவுசெய்திட வேண்டும் என்ற தீர்மானத்தை நான் மொழிகிறேன். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு பேசுகையில், “ஆளுநர் உரையில் தமிழிலும், ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்ட பகுதிகள் மட்டுமே அவைக்குறிப்பில் இடம் பெறும். வேறு எவையும் இடம் பெறாது” என்றார். இதைத்தொடர்ந்து ஆளுநர் உரை தொடர்பாக அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

 

The post அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இடம்பெற்ற பகுதிகள் மட்டுமே பேரவை அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட வேண்டும்: தீர்மானத்தை முன்மொழிந்து அமைச்சர் துரைமுருகன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Governor ,Minister ,Duraimurugan ,Chennai ,Water Resources ,Assembly ,
× RELATED ஆளுநர் உரை தொடர்பாக அரசியலமைப்பு...