எடப்பாடி உறவினர் நிறுவனத்தில் 2வது நாளாக ஐடி ரெய்டு நீடிப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினரின் நிறுவனங்கள், ஆலை, வீடுகள் மற்றும் திருமண மண்டபம் என 6 இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோடு பூந்துறை சாலை செட்டிபாளையத்தில் தொழிலதிபரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினருமான என்.ராமலிங்கத்துக்கு சொந்தமான என்.ஆர். கட்டுமான நிறுவனம் செயல்படுகிறது. டோல் பிளாசா, திருமண மண்டபம், ஸ்டார்ச் மாவு ஆலை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களையும் ராமலிங்கம் நடத்தி வருகிறார்.

ராமலிங்கத்தின் நிறுவனத்திற்கு அவரது மகன்கள் சூரியகாந்த், சந்திரகாந்த் ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர். ராமலிங்கத்தின் கட்டுமான நிறுவனம் தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஒன்றிய, மாநில அரசுகளின் சார்பில் ஒப்பந்தம் செய்து, கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருகின்றன. அதிமுக ஆட்சிக்காலத்தில் ராமலிங்கத்தின் நிறுவனத்தில் சொத்து மதிப்புகள் கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில், ராமலிங்கத்தின் நிறுவனத்தில் வருமான வரி ஏய்ப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதன்பேரில், ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என்ஆர் கட்டுமான நிறுவன அலுவலகத்தில் நேற்று முன்தினம் கோவையை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். தொடர்ந்து, அவல்பூந்துறை பகுதியில் உள்ள ராமலிங்கம் வீட்டிலும், பூந்துறை சாலையில் உள்ள என்ஆர் திருமண மண்டபத்திலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது. ராமலிங்கத்தின் நிறுவனத்துடன் அதிக வரவு செலவில் ஈடுபட்ட ஈரோடு முள்ளாம்பரப்பை தலைமையிடமாக கொண்டு செயல்படும் செல்வசுந்தரம் என்பவருக்கு சொந்தமான ஆர்பிபி கட்டுமான நிறுவனத்திலும், நவநாயக்கன்பாளையத்தில் உள்ள செல்வ சுந்தரத்தின் வீடுகளிலும் சோதனை நடத்தினர்.

மேலும், அம்மாபேட்டையில் ராமலிங்கம் தலைவராகவும், எடப்பாடி பழனிசாமியின் சகோதரி மகன் வெற்றிவேல் இயக்குநராகவும் செயல்படும் மரவள்ளி கிழங்கு அரவை ஆலையிலும் சோதனை நடத்தினர். ராமலிங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகள், திருமண மண்டபங்கள், ஆர்பிபி நிறுவனம், வீடு, மரவள்ளி கிழங்கு ஆலை ஆகியவற்றில் நேற்றும் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 30க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்த சோதனை முடிந்த பிறகே முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதா? என்பது தெரிய வரும்.

The post எடப்பாடி உறவினர் நிறுவனத்தில் 2வது நாளாக ஐடி ரெய்டு நீடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: