×

சிறப்பு சிகிச்சை எதுவும் தேவையில்லை எச்எம்பிவி வைரஸ் பாதிப்பை கண்டு யாரும் பயப்பட வேண்டாம்: 3 முதல் 6 நாள் ஓய்வெடுத்தால் போதும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், தமிழகத்தில் பரவிவரும் எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு கொண்டு வரப்பட்டது. இதில், அரசின் கவனத்தை ஈர்த்து உறுப்பினர்கள் ஜி.கே.மணி (பாமக.), ஜே.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ்), சிந்தனை செல்வன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), டாக்டர் சி.விஜயபாஸ்கர் (அதிமுக) ஆகியோர் பேசினர். உறுப்பினர்கள் கேள்விக்கு பதில் அளித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: சீனாவில் எச்.எம்.பி.வி. வைரஸ் பரவியிருக்கிறது என்று சொல்லப்பட்டாலும் கூட, இது ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்னாலேயே கண்டறியப்பட்ட ஒரு வைரஸ் ஆகும். இந்த வைரசை பொறுத்தவரையில் குளிர்காலம் மற்றும் இளவேனில் காலங்களில் இந்த நோய் பரவக்கூடும் என்பது ஏற்கெனவே அனைவரும் அறிந்திருக்கிற ஒன்று. இந்த நோய்க்கான அறிகுறிகள் என்பது சளி, இருமல், காய்ச்சல் மற்றும் சுவாச பாதிப்புகள். 3 முதல் 6 நாட்கள் இந்த பாதிப்பு இருக்கும்.

மற்றபடி, எச்.எம்.பி.வி. வைரஸ் பாதிப்பை கண்டு பயப்பட வேண்டிய அவசியமில்லை. மருத்துவ வல்லுநர்கள் இதற்கான எந்த சிறப்பு சிகிச்சையும் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்கள். தடுப்பு மருந்தும் தேவையில்லை.
கொரோனா வைரஸ் பரவிய காலத்தில், பல்வேறு வடிவில் உருமாறியது. அவை அனைத்தும் வீரியம் மிக்கதாக இருந்தது. ஆனால், இந்த வைரஸ் அவ்வாறு இல்லை. எச்.எம்.பி.வி. வைரஸ் வீரியமானது அல்ல. இதற்காக பிரத்யேக மருந்து, சிகிச்சை தேவையில்லை. 3 முதல் 6 நாட்கள் சும்மா இருந்தாலே போதும். யாருக்கும் பயம், பதற்றம் தேவை இல்லை. தொடர் வைரஸ்களைப் போலவே இதுவும் சாதாரணமான ஒன்றுதான் என்றும், இதில் எந்த வீரியத் தன்மையும் இல்லை. எச்.எம்.பி.வி. வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முககவசம் அணிய வேண்டும், கைகளையும் அவ்வப்போது சோப்பு போட்டு கழுவ வேண்டும். எனவே, எச்.எம்.பி.வி. சாதாரண வைரஸ்தான். யாரும் பயப்பட தேவையில்லை.

The post சிறப்பு சிகிச்சை எதுவும் தேவையில்லை எச்எம்பிவி வைரஸ் பாதிப்பை கண்டு யாரும் பயப்பட வேண்டாம்: 3 முதல் 6 நாள் ஓய்வெடுத்தால் போதும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma. Subramanian ,Tamil Nadu ,G.K. Mani ,PMK ,J.G. Prince ,Congress ,Chinthana Selvan ,Viduthulai Siruthaigal Party ,
× RELATED எச்.எம்.பி.வி வீரியமற்ற வைரஸ் மக்கள்...