சென்னை: சென்னை, தலைமைச் செயலகத்தில், எச்.எம்.பி.வி தொற்று தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது. தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எச்எம்பிவி என்று சொல்லக்கூடிய ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் இதுவரை எந்தவிதமான அறிவுறுத்தல்களும் செய்யவில்லை. அதேபோல் ஒன்றிய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக இதுபோல் பாதிப்புகள் ஏற்படும்போது குறிப்பாக மாநிலங்களில் உள்ள சுகாதாரத்துறைகளுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்புவார்கள். அதுவும் கூட இதுவரை இல்லை.
இந்த வைரஸ் குறித்து பயப்பட தேவையில்லை. பதற்றப்படவும் தேவையில்லை. இது 50 ஆண்டுகளுக்கு முன்னால் பரவிய வைரஸ். இந்த வைரஸ் பாதிப்புவந்தால் 3 முதல் 6 நாட்களுக்கு சளி, இருமல் போன்ற சிறிய வகை பாதிப்புகள் இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் நுரையீரல் பாதிப்புகள் ஏற்படும்.
இந்த வைரஸ் பொறுத்தவரை 3 முதல் 5 நாட்களில் தானாகவே குணமாகி விடும்.
இதற்கென பிரத்யேகமாக எந்தவித சிகிச்சைகளும் இல்லை. எந்தவித சிகிச்சைகளும் எடுத்துக் கொள்ளாமல் இருந்தாலே தானாகவே சரியாகிவிடும். எனவே இந்த வைரஸ் தொடர்பாக பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை சேலத்தில் ஒருவருக்கும், சென்னையில் ஒருவர் என 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. 2 பேருமே நலமுடன் இருக்கிறார்கள். பருவமழையை ஒட்டி வருகிற இந்த நோய் பாதிப்புகள் இருப்பவர்கள் பொது வெளியில் செல்கிறபோது முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது.
அதேபோல் இந்த நோய் பாதிப்பு இருப்பவர்கள் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவது, தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது போன்ற நடவடிக்கைகளில் முழுமையாக இருந்தாலே போதும், அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் லால்வேனா, சிறப்பு செயலாளர் கலையரசி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post எச்.எம்.பி.வி வீரியமற்ற வைரஸ் மக்கள் அச்சப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.