கோபி,ஜன.7: தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து அவமதித்து வரும் தமிழக ஆளுநரை கண்டித்து ஈரோடு காளைமாடு சிலை அருகே இன்று (7ம் தேதி) நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட திமுகவில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் என்.நல்லசிவம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தமிழக ஆளுநர் தொடர்ந்து அவமதித்து வருவதோடு, ஒன்றிய அரசின் ஏஜெண்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களை செய்து வரும் ஆளுநரையும் அவரது செயல்பாடுகளையும் கண்டித்தும்,ஆளுநரை காப்பாற்றவும், ஒன்றிய அரசு மீதுள்ள தமிழக மக்களின் கோபத்தை திசை திருப்பும் அதிமுக மற்றும் பாஜ செயல்பாடுகளை கண்டித்தும், ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட திமுக சார்பில் ஈரோடு காளை மாடு சிலை அருகே இன்று(7ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஆர்ப்பாட்டத்தில் மாநில,மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், வார்டு, கிளை கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் கழகத்தினர் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்து உள்ளார்.
The post தமிழக ஆளுநரை கண்டித்து ஈரோட்டில் இன்று திமுக ஆர்ப்பாட்டம் பங்கேற்க மாவட்ட செயலாளர் அழைப்பு appeared first on Dinakaran.