×

தமிழகத்திற்கு மெத்தாம்பெட்டமின் சப்ளை செய்த தென்ஆப்ரிக்காவை சேர்ந்த கடத்தல் மன்னன் கைது: டெல்லியில் சுற்றிவளைத்தது தனிப்படை

வளசரவாக்கம்: டெல்லியில் இருந்து கெட்டமைன் மற்றும் மெத்தாம்பெட்டமின் உள்ளிட்ட விலை உயர்ந்த போதைப்பொருட்கள் கடத்தி வரப்பட்டு, சென்னை அண்ணாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக, அண்ணாநகர் துணை ஆணையர் சினேக பிரியாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், அரும்பாக்கம் உதவி ஆணையர் ரமேஷ் மற்றும் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அதில், வியாசர்பாடியை சேர்ந்த கணேசன் (50), ரவி, மதன் ஆகியோர் டில்லியில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரிந்தது. கடந்த வாரம் அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து, ரூ.3.50 கோடி மதிப்புள்ள கெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். பின்னர், மூவரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை ஆய்வு செய்த போது, இவர்களுடன் தொடர்புடைய இருவர் சித்தாலப்பாக்கம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன், இவர்கள் தங்கி இருந்த வீட்டை தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து, அங்கிருந்த சித்தலப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜா (42), இவரது டிரைவர் சத்தியசீலன் ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்களது வீட்டில் சோதனை செய்தபோது, ரூ.30 லட்சம் மதிப்புள்ள மெத்தாம்பெட்டமின் போதைப்பொருட்கள் மற்றும் 5 நாட்டு துப்பாக்கிகள், 80 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், பீகார் மாநிலத்திற்கு சென்று ஒரு நாட்டு துப்பாக்கி ரூ.50,000 வீதம் வாங்கி வந்து, இலங்கையில் பலருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 105 கிராம் தங்க நகைகள், ரூ.51 லட்சம், ஒரு கார், 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.இவர்களுக்கு, டெல்லியில் இருந்து ஒருவர் மெத்தாம்பெட்டமின் உள்ளிட்ட போதைப்பொருட்களை சப்ளை செய்தது தெரிந்தது.

இதையடுத்து, அண்ணாநகர் துணை ஆணையர் சினேக பிரியா உத்தரவின்படி திருமங்கலம் இன்ஸ்பெக்டர் முகமது சபியுல்லா தலைமையில் தனிப்படை போலீசார் டெல்லியில் முகாமிட்டு, போதைப்பொருள் விற்றவரை கைது செய்தனர். விசாரணையில், அவர் தென் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த ஜான் உக்கபேர் (35) என்பதும், டெல்லி மற்றும் பெங்களூரு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கெட்டமைன் மற்றும் மெத்தாம்பெட்டமின் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இவரை சென்னை அழைத்து வந்து, ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த போதைப்பொருள் விற்பனை வழக்கில் இதுவரை 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

The post தமிழகத்திற்கு மெத்தாம்பெட்டமின் சப்ளை செய்த தென்ஆப்ரிக்காவை சேர்ந்த கடத்தல் மன்னன் கைது: டெல்லியில் சுற்றிவளைத்தது தனிப்படை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Delhi ,Annanagar ,Deputy Commissioner ,Sineka Priya ,Chennai ,Dinakaran ,
× RELATED மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை தமிழக அரசே...