×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணியகால உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணியகால உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா, சித்ரா பவுர்ணமி, ஆனி பிரம்மோற்சவம், ஊடல் திருவிழா உள்பட பல்வேறு உற்சவங்கள் நடைபெறும். இதில் சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யும் காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்றும், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி சூரியன் பயணம் செய்யும் காலம் உத்ராயண புண்ணிய காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு சூரியன் தனது பயணத்தை தொடங்கும் காலம் திருவண்ணாமலையில் விழாவாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி கார்த்திகை தீபத்திருவிழா, ஆனி பிரம்மோற்சவம் (தட்சிணாயன புண்ணியகால உற்சவம்), உத்ராயண புண்ணியகால உற்சவம், தட்சிணாயண புண்ணிய கால உற்சவம் ஆகியவற்றின் தொடக்கமாக சுவாமி சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் ஆடிப்பூர பிரம்மோற்சவத்திற்கு மட்டும் உண்ணாமுலையம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெறும்.

இந்தாண்டு உத்ராயண புண்ணியகால உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு கோபூஜை, திருப்பள்ளி எழுச்சியை தொடர்ந்து, அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், அண்ணாமலையார் சமேத பிரியாவிடை, உண்ணாமுலையம்மன் சிறப்பு அலங்காரத்தில் மேளதாளம் முழங்க தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

வேதமந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியை சிவாச்சாரியார்கள் ஏற்றினர். அப்போது கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கோயிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என்று பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். தினமும் காலை மற்றும் இரவில் விநாயகர், சந்திரசேகரர் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். விழாவின் நிறைவு நாளான வருகிற 14ம்தேதி தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

பின்னர் அண்ணாமலையார் கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவூடல் திருவிழா 15ம்தேதியும், 16ம்தேதி காலை அண்ணாமலையார் கிரிவலமும், மாலை மறுவூடல் திருவிழாவும் நடைபெற உள்ளது. இந்நிலையில் அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வழக்கம்போல் இன்றும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணியகால உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Uthrayana Punnyakala Utsavam ,Annamalaiyar Temple ,Tiruvannamalai ,Lord ,Karthigai Deepathi ,Chitra Pournami ,Ani Brahmotsavam ,Oodal festival ,Tiruvannamalai… ,Dinakaran ,
× RELATED உத்ராயண புண்ணியகால உற்சவம்...