பெரம்பூர்: பாக்டீரியா, வைரஸ் இந்த சொற்களை கொரோனா காலகட்டத்திற்கு முன்பு வரை அறிவியல் புத்தகத்தில் படித்திருப்போம் அவ்வளவுதான். ஆனால் கொரோனா வந்த பிறகு ஒவ்வொரு முறையும் புதுவிதமான பாக்டீரியா தொற்றுகள், வைரஸ் தொற்றுகள் உண்டாகி அது மனிதர்களை பாடாய்படுத்தி வருகிறது. ஒவ்வொரு முறையும் பருவநிலை மாற்றம் மற்றும் தட்பவெட்ப நிலை காரணமாக புதிது புதிதாக பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ் தோன்றி அது மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதில் கொரோனாவுக்கு முன்பு சாதாரண காய்ச்சல் அல்லது டைபாய்டு மலேரியா சிக்கன் குனியா எலி காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள் மட்டுமே நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தற்போது புதிது புதிதாக காய்ச்சல்களும், காய்ச்சலுடன் கூடிய சளித் தொல்லை, உடல் வலி, தலைவலி போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பின்பு இதுபோன்ற பாக்டீரியாக்கள் அல்லது வைரஸ்கள் தொற்று ஏற்பட்டாலும், கூடவே உடல் வலி என்பது கண்டிப்பாக வந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் சமீபகாலமாகவே சாதாரண காய்ச்சல் வந்தால் கூட குணமாவதற்கு 7 நாட்கள் வரை எடுத்துக் கொள்கிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பருவநிலை மாறுபாடு மற்றும் கடும் குளிர் காரணமாக காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சளி, தொண்டை வலி ஆகிய பிரச்னைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இ கோலி எனப்படும் தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியா தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பாதிப்பு அடங்குவதற்குள் தற்போது தமிழகத்தில் ஸ்க்ரப் டைப்ஸ் என்ற பாக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தற்போது ஸ்க்ரப் டைப்ஸ் என்ற நோய் பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.
ஓரியன்டியா சுட்சுகாமுஷி என்ற ஒட்டுண்ணியால் தான் இந்த ஸ்க்ரப் டைப்ஸ் காய்ச்சல் பரவி வருவதாகவும், இந்த நோய் பாதித்தால் காய்ச்சல், உடல் வலி, தலைவலி போன்றவை ஏற்படும் என்றும், உடலில் பல்வேறு இடங்களில் கருப்பு கொப்பளங்கள் போல உருவாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தெற்கு மாவட்டங்களில் தற்போது இந்த நோய் பரவி வருவதாகவும், வேலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் இந்த நோயால் சிலர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்க்ரப் டைப்ஸ் என்பது பூச்சிக்கடியால் ஏற்படும் நோய் என்பதால் பொதுவாகவே விவசாயத்தில் ஈடுபடுவோருக்கும், செடிகள் அதிகம் இருக்கும் பகுதியில் இருப்பவர்களுக்கும் இந்த நோய் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே விவசாயம், புதர் நிறைந்த பகுதிகளில் இருப்பவர்கள் காடுகளில் வேலை செய்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பை ஏற்படுத்த கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒருவருக்கு 5 நாள்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக ஐஜிஎம் ஆன்ட்டிபாடி மற்றும் எலிசா போன்ற மருத்துவப் பரிசோதனை செய்து உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இந்த நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் டாக்ஸிசிலின், அசித்ரோமைசின், ரிபாம்பிசின் உள்ளிட்ட மருந்துகளை, நோயாளிகன் உடல்நிலை மற்றும் வயதுக்கு ஏற்ற அளவில் வழங்க வேண்டும் என்றும், 48 – 72 மணி நேரத்தில் உடல்நிலை சீராகவில்லை என்றாலோ, இதயம் மற்றும் இதயத் துடிப்பு அதிகரிப்பது போன்ற பிரச்னைகளை உணர்ந்தாலோ உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.
ஸ்க்ரப் டைப்ஸ் நோய் குறித்து பெரம்பூர் சென் மருத்துவமனையில் தலைமை மருத்துவர் வெங்கடேசன் கூறுகையில், ‘‘இந்த ஸ்க்ரப் டைப்ஸ் என்பது முழுக்க முழுக்க பாக்டீரியாவால் வருகிறது. இது ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதனுக்கு பரவாது. பூச்சி வகையை சேர்ந்த உயிரினங்களில் தொற்று பாதிக்கப்பட்ட பூச்சிகள் மனிதர்களை கடிக்கும் போது இந்த தொற்று மனிதர்களுக்கும் ஏற்படுகிறது. இந்த தொற்று மனிதர்களுக்கு ஏற்பட்டால் கடுமையான காய்ச்சல், உடல் வலி, தலைவலி, சிலருக்கு வாந்தி குறிப்பாக மூட்டுக்கு மூட்டு வலி ஏற்படுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். மேலும் குறிப்பிட்ட அந்த பூச்சி கடித்த இடத்தில் சிறிய அளவில் புண் ஏற்படும் அந்த இடம் அரிப்பு தன்மை ஏற்படுவதால் ஆரம்பத்தில் நாம் ஏதோ சிறிய அளவில் பூச்சி கடித்தது என நினைத்து அதை சொரிந்து விட்டால் அரிப்பு தன்மை அதிகமாகி ரணம் அதிகமாகிவிடும்.
பொதுவாவே 2 நாள் காய்ச்சல் இருந்தால் பல்வேறு காய்ச்சல் பரிசோதனைகளை நாம் பரிசோதனை செய்துவிட்டு, எதுபோன்ற காய்ச்சலோ அதற்கு ஏற்ற மருந்துகளை தருவோம் ஆனால் தற்போது ரத்தப் பரிசோதனையில் எதுபோன்ற காய்ச்சலும் இல்லை என தெரியவரும் நிலையில் ஸ்க்ரப் டைப்ஸ் பரிசோதனை செய்தால் அவர்களுக்கு இந்த பிரச்னை இருப்பது தெரிய வருகிறது. குறிப்பாக காய்ச்சல் இருந்து கை கால்களில் ஏதாவது சிறிய அளவில் கொப்பளம் போன்று இருந்தால் அதனை வைத்து இதற்கான அறிகுறி என நாம் கனித்து விடலாம்.
இது 100% குணப்படுத்தக்கூடிய வியாதி தான். இதற்கு உண்டான ஆன்டிபயாட்டிக் மருந்துகள் மிக எளிய முறையில் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனையிலும் கிடைக்கிறது. மிகவும் விலை உயர்ந்த மருந்துகள் கிடையாது. சாதாரணமாக கிடைக்கும் மருந்துகள் தான். அதனால் பொதுமக்கள் இதைக் கண்டு அஞ்ச வேண்டாம். காய்ச்சல் சற்று அதிகமாக இருந்தாலே மருத்துவர்களை அணுகி அதற்கு உரிய முறையில் சிகிச்சை எடுத்துக் கொண்டாலே எளிய முறையில் இதனை சரி செய்து விடலாம்.
தற்போது அரசு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளதால் பொதுமக்களுக்கு கூடுதல் கவனமுடன் இருக்க வழிவகை செய்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்ட அந்தப் புண் வந்த இடத்தை சுத்தம் செய்து மருந்துகளை அதன் மீது போட வேண்டும். இதை அலட்சியமாக விட்டு விட்டு உரிய முறையில் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாமல் விட்டால் உடல் உறுப்புக்களை இந்த கிருமி பாதிப்பு ஏற்பட செய்து மிகப் பெரிய பிரச்னையை உண்டு செய்து விடும் எனவே இது குறித்து போதிய விழிப்புணர்வுடன் பொதுமக்கள் மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்,’’ என்றார்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால், ஆயில் மற்றும் மசாலா அதிகம் கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். எந்த உணவு அதிக நேரம் ஜீரணத்துக்கு எடுத்துக் கொள்கிறதோ அந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். சீஸ், பட்டர், ஆயில் இவை அனைத்தும் குடலில் சென்று அதிக நேரம் ஜீரணத்திற்கு உண்டான நேரத்தை எடுத்துக் கொள்ளும். அதனால் இவற்றை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாக கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக பழங்கள் காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். 5 நாள் வரை இதற்கு மருந்து எடுத்துக் கொண்டால் முழுமையாக குணமடைந்து விடலாம்.
The post பருவநிலை மாற்றம் காரணமாக புதிதாக பரவும் ஸ்க்ரப் டைப்ஸ் காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி: மருத்துவர்கள் விளக்கம் appeared first on Dinakaran.