ஆண்டார்குப்பம் – செங்குன்றம் சாலையில் சாய்ந்து கிடக்கும் டிரான்ஸ்பார்மர்: சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 17வது வார்டு கொசப்பூர் அருகே ஆண்டார்குப்பம்- செங்குன்றம் சாலையில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இங்கிருந்து பல்வேறு பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த டிரான்ஸ்பார்மர் பல மாதங்களாக பழுதடைந்து சாய்ந்து கிடக்கிறது. மேலும் செடி, கொடிகள் வளர்ந்து டிரான்ஸ்பார்மர் மீது படர்திருப்பதால் மழைக்காலத்தில் இந்த பகுதியில் அடிக்கடி மின் கசிவு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி டிரான்ஸ்பார்மர் கீழே மழைநீர் தேங்கி இருப்பதால் எந்த நேரத்திலும் டிரான்ஸ்பார்மர் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எதிர்பாராதவிதமாக பலத்த காற்று வீசினால் டிரான்ஸ்பார்மர் கீழே சாய்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு மின்விநியோகம் தடைபடும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘ஆண்டார்குப்பம் – செங்குன்றம் சாலை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மின் கம்பம்தின் மீது ஓவர் ஹெட் முறையில் வீடுகளுக்கு மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. இவ்வாறு உள்ள மின் வயர்கள் பல இடங்களில் தாழ்வாகவும், மரங்களில் படர்ந்தும் உள்ளன. ஆபத்தான நிலையில் உள்ள இவற்றை சரி செய்ய வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தால் வயர்கள் படர்ந்திருக்கும் மரக்கிளையை எங்களால் வெட்ட முடியாது என மறுத்து விடுகின்றனர். இதனால் மழைக்காலங்களில் இந்த பகுதியில் அடிக்கடி மின் கசிவு ஏற்பட்டு கால்நடைகள் உயிரிழக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக அனைத்து டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பங்கள் வயர்களை முறையாக பராமரிக்க வேண்டும்,’’ என்றனர்.

* மாற்றப்படுமா?
மணலி அருகே உள்ள கொசப்பூர், அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு விளாங்காடுபாக்கம் மின்வாரிய அலுவலகத்தின் மூலம் மின்விநியோகம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் கொசப்பூரிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக சிரமப்பட்டு வருகின்றனர். எனவே மேற்கண்ட குடியிருப்புகளின் மின்விநியோக பராமரிப்பை 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மணலி மின்வாரிய அலுவலகத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

The post ஆண்டார்குப்பம் – செங்குன்றம் சாலையில் சாய்ந்து கிடக்கும் டிரான்ஸ்பார்மர்: சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: