×

காஷ்மீரில் சோகம் 300 அடி பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்து 4 ராணுவ வீரர்கள் பலி: மோசமான வானிலையால் விபத்து

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 300 அடி பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்த விபத்தில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர். மோசமான வானிலையால் இந்த விபத்து நிகழ்ந்ததாக ராணுவ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தது. எஸ்கே பயேன் பகுதியில் அந்த வாகனம் வந்த போது, திடீரென சாலையில் இருந்து விலகி 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்தது. இதில், வாகனம் முற்றிலும் நொறுங்கி 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே வீரமரணம் அடைந்தனர். 2 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘மோசமான வானிலை மற்றும் பனிமூட்டத்தால் தெளிவான பார்வை நிலை இல்லாத காரணத்தால் ராணுவ வாகனம் சாலையிலிருந்து விலகி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த துரதிஷ்டவசமாக சம்பவத்தில் துணிச்சல்மிக்க 3 வீரர்களை ராணுவம் இழந்துள்ளது. அவர்களின் குடும்பங்களுக்கு இதயப்பூர்வமான இரங்கலை தெரிவிக்கிறோம். காயமடைந்த வீரர்கள் உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக உதவி செய்த உள்ளூர் மக்களுக்கு ராணுவம் நன்றி தெரிவிக்கிறது’’ என கூறப்பட்டுள்ளது. இதே போல கடந்த மாதம் பூஞ்ச் மாவட்டத்தில் 300 அடி பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் விழுந்து 5 வீரர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த விபத்து குறித்து அறிந்ததும் காங்கிரஸ் தலைவர் கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post காஷ்மீரில் சோகம் 300 அடி பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்து 4 ராணுவ வீரர்கள் பலி: மோசமான வானிலையால் விபத்து appeared first on Dinakaran.

Tags : Srinagar ,Kashmir ,Jammu and Kashmir ,Bandipora district ,Dinakaran ,
× RELATED ஜம்முவில் கடும் பனிப்பொழிவு: ரயில், விமான சேவை நிறுத்தம்