×

மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் விவசாயிகள் போராட்டத்தை தொடரலாம்: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் விவசாயிகள் போராட்டத்தை தொடரலாம் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்த பஞ்சாப் அரசின் கோரிக்கையையும் ஏற்றுக் கொண்டுள்ளது. பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற பஞ்சாப் விவசாயிகள் அரியானா எல்லைப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பஞ்சாப்-அரியானா எல்லை பகுதியான கனவுரியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கடந்த நவம்பர் 26ம் தேதி முதல் 70 வயதான பஞ்சாப் விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் அவரின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளதாக மருத்துவர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவரை மருத்துவமனைக்கு மாற்ற பஞ்சாப் அரசுக்கு முன்னதாக இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இந்த உத்தரவை பஞ்சாப் அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மேற்கண்ட அவமதிப்பு வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அமர்வில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பஞ்சாப் அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவானது விவசாய சங்கங்களை சந்திக்க உள்ளது.

இதையடுத்து சுமூகமான முடிவு எட்டப்படும் என நம்புகிறோம் எனவே வழக்கை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து பஞ்சாப் மாநில அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள்,\\” இந்த விவகாரத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என உச்ச நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவானது,\\” போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் புரிந்து கொள்ளப்பட்டது. மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் போராட்டத்தை தொடரலாம். அதற்கு நாங்கள் எந்தவித தடையும் விதிக்கவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

The post மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் விவசாயிகள் போராட்டத்தை தொடரலாம்: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Punjab government ,Dinakaran ,
× RELATED உயர் நீதிமன்ற நீதிபதிகளின்...