×

வரும் 10ம் தேதி திருச்சியில் அவசர கூட்டம்; மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கண்காணிப்பு குழு; தனியார் பள்ளிகள் சங்கம் முடிவு

சென்னை: தனியார் பள்ளிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கவும் பள்ளிகளின் உட்கட்டமைப்பை கண்காணித்து ஆலோசனை வழங்கிடவும் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் அவசர ஆலோசனைக் கூட்டத்தை ஜனவரி 10ம் தேதி திருச்சியில் கூட்டுகிறது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த லியா லட்சுமியின் மறைவுக்கு தனியார் பள்ளிகள் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது. இனிவரும் காலங்களில் தனியார் பள்ளிகள் தங்கள் உட்கட்டமைப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் வாகனங்களில் குழந்தைகள் ஏறும்போதும் இறங்கும்போதும் உதவியாளர்கள் பக்க பலமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் பள்ளித் தாளாளர்களை தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கம் கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் தனியார் பள்ளிகளை ஓர் உயர்மட்டக் குழு அமைத்து பள்ளிகளின் பாதுகாப்பு ஏற்பாட்டை கண்காணித்து பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்கி குறைகள் இருந்தால் உடனே அதைக் களைய நடவடிக்கை எடுப்பதே குழுவின் நோக்கம். பாதுகாப்பு கண்காணிப்பு குழு அமைப்பதற்கான அவசர ஆலோசனை கூட்டம் ஜனவரி 10ம் தேதி திருச்சியில் நடைபெற இருக்கிறது.

குழந்தையின் இழப்பு ஆற்றொனாத் துயரத்தைத் தந்த போதிலும், அங்கொன்றும் இங்கொன்றமாக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் பாதுகாப்பது தான் தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலையாய பணி என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இச்சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என்று அன்போடு அரசியல் தலைவர்களை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

 

The post வரும் 10ம் தேதி திருச்சியில் அவசர கூட்டம்; மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கண்காணிப்பு குழு; தனியார் பள்ளிகள் சங்கம் முடிவு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Private Schools Association ,Chennai ,Tamil Nadu Private Schools Association ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பள்ளிகளில் பாதுகாப்பு கண்காணிப்பு...