சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் 40 மாதங்களில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.1,666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. 100 கோடியில் 230 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகமான நெல் சேமிப்பு கிடங்குகள் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு முதல் பரிசு வழங்கியுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றபின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வாயிலாக நிறைவேற்றப்பட்டுள்ள புதிய திட்டங்களால் தமிழ்நாட்டிலிருந்து வறுமை முற்றிலும் அகற்றப்பட்டு மக்கள் பசிப்பிணி ஒழிந்து வளமான வாழ்வில் மகிழ்ச்சி கொண்டுள்ளனர். ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கைகள் வாயிலாக வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது எனக் குறிப்பிடப்பட்டு பாராட்டப்பட்டுள்ளது.
கடந்த 40 மாதங்களில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் நிறைவேற்றப்பட்டுள்ள முக்கியப் பணிகள் விவரம் :
மாதாந்திர பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம்கள் நடத்தப்பட்டு நகல் அட்டை, புதிய குடும்ப அட்டை, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல். உள்ளிட்ட 1 லட்சத்து 83 ஆயிரத்து 610 கோரிக்கைகள் பெறப்பட்டு அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பொது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நிவாரணத் தொகையாக ₹4,000 வீதம் 2 கோடியே 8 லட்சத்து 14 ஆயிரத்து 528 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
விவசாயிகள் விளைவிக்கும் நெல்லினை இடைத்தரகர்கள் தலையீடின்றியும் கால தாமதமின்றியும் உடனடியாக விற்பனை செய்யும் பொருட்டு ஆன்லைன் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டு 1 கோடியே 8 லட்சத்து 35 ஆயிரத்து 621 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அரிசி பெறும் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மாநகராட்சிப் பகுதிகளில் 10 கிலோ வீதமும். ஏனைய பகுதிகளில் 5 கிலோ வீதமும் நியாய விலைக் கடைகளின் இருப்பைப் பொறுத்து அவர்களது விருப்பத்தின்படி அரிசிக்குப் பதிலாகக் கோதுமை விலையில்லாமல் வழங்கப்படுகிறது. இதுவரை 7 லட்சத்து 23 ஆயிரத்து 482 மெ.டன் கோதுமை விலையில்லாமல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தினங்களில் வீசிய மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட கனமழையினால், சென்னை, திருவள்ளூர். காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ₹6,000 வீதம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தபடி 23 லட்சத்து 18 ஆயிரத்து 200 குடும்பங்களுக்கு ₹1,390.92 கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.
முதல்வர் அறிவித்தபடி 17.12.2023, 18.12.2023 ஆகிய இரு தினங்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த அதிகன மழையினால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிகக் கடுமையாக வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மேல் வெள்ளம் சூழ்ந்து துணிமணிகள் / பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருள்களை இழந்த 6 லட்சத்து
36 ஆயிரத்து 971 குடும்பங்களுக்கு ₹6,000 மற்றும் 5 கிலோ அரிசி வீதம் வழங்கப்பட்டது மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில், இதர வட்டங்களில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மொத்தம் 13 இலட்சத்து 34 ஆயிரத்து 561 குடும்பங்களுக்கு தலா ₹1,000/- வீதம் 92சதவீதப் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
திராவிட மாடல் அரசு விவசாயிகளின் நலன் கருதி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குப் படிப்படியாகக் கட்டிடங்களை கட்டி வருகிறது. 40 மாதங்களில் 230 நெல் கொள்முதல் நிலையக் கட்டிடங்கள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு, இதுவரை 130 நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு எஞ்சியவற்றின் கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. 358.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 259 மேற்கூரை அமைப்புடன்கூடிய நெல் சேமிப்புத் தளங்களை நிறுவ ஆணையிட்டுள்ளார். அதன்படி, 213 நெல் சேமிப்புத் தளங்கள் கட்டப்பட்டு எஞ்சியவை கட்டப்பட்டு வருகின்றன.
டெல்லியில் உள்ள தேசிய கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான சேமிப்புப் கிடங்குகளைப் பதிவு செய்ததற்காகத் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு முதல் பரிசு வழங்கிப் பாராட்டியுள்ளது. உணவுத் துறையில் தன்னிறைவு அடைவதற்காகப் புதிய பல திட்டங்கள் தந்து தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திச் சாதனைகள் நிகழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 130 நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு எஞ்சியவற்றின் கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன
The post திராவிட மாடல் ஆட்சியில் 40 மாதங்களில் புதிதாக 1,666 நியாய விலைக் கடைகள் திறப்பு: ரூ.100 கோடியில் 230 நெல் கொள்முதல் நிலையங்கள் appeared first on Dinakaran.