வால்பாறை: சாலையில் மரத்தை உடைத்து போட்டு சென்னை சுற்றுலா பயணிகள் வந்த காரை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் வால்பாறை அருகே பரபரப்பு ஏற்பட்டது. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன். இவர் நேற்று முன்தினம் 2 குழந்தைகள் உள்பட 8 பேருடன் கேரள மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்ல காரில் கோவை மாவட்டம் வால்பாறைக்கு வந்தார். அன்று இரவு வால்பாறையில் தங்கிய அவர்கள் நேற்று காலை காரில் அதிரப்பள்ளி சென்றனர். அங்கு முக்கிய சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்த்து விட்டு நேற்று மாலை ஊர் திரும்பினர். இரவு 7 மணி அளவில் வால்பாறை- மழுக்குப்பாறைக்கு இடையே ஆனைக்காயம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானை, மரத்தை உடைத்து போட்டு காரை வழிமறித்தது.
மேலும் காரை நோக்கி காட்டு யானை ஆவேசமாக ஓடி வந்தது. இதைபார்த்த அரவிந்தன் காரை வேகமாக பின்னோக்கி நகர்த்தினார். அப்போது காரில் இருந்த 2 குழந்தைகள் யானையை பார்த்து கதறி அழுதனர். குழந்தைகள் அழுகை சத்தம் கேட்டு கார் அருகே வந்த காட்டு யானை பக்கவாட்டில் நின்று நிதானமாக யோசித்து தானாக வனத்துக்குள் சென்றது. இதனால் அவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறித்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் சாலையில் கிடந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post சாலையில் மரத்தை உடைத்து போட்டு சென்னை சுற்றுலா பயணிகள் வந்த காரை வழிமறித்த ஒற்றை காட்டு யானை: வால்பாறை அருகே பரபரப்பு appeared first on Dinakaran.