- பறக்கும் அணி
- 2019 நாடாளுமன்றத் தேர்தல்கள்
- அமலாக்கத் துறை
- வேலூர்
- கதிர் ஆனந்த்
- சென்னை
- 2019 பாராளுமன்றம்
- தின மலர்
சென்னை: 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பறக்கும்படை சோதனையில் கணக்கில் வராத ரூ.11 கோடி ரொக்கம் பறிமுதல் செய்த வழக்கு தொடர்பாக வேலூர் எம்பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பறக்கும்படைக்கு வந்த ரகசிய தகவலின் படி வேலூர் தொகுதி வேட்பாளராக நின்ற கதிர்ஆனந்த் வீடு மற்றும் உறவினரான பூஞ்சோலை சீனிவாசன் ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கதிர் ஆனந்த் வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் இருந்து மூட்டை மூட்டையாக ரூ.11 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளும் கதிர்ஆனந்த் மற்றும் பூஞ்சோலை சீனிவாசன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து கணக்கில் வராத ரூ.11.48 கோடி ரொக்கம் தொடர்பாக எந்த ஆவணங்களும் சிக்கவில்லை. இருந்தாலும் கைப்பற்றப்பட்ட பணம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் வேலூர் நாடாளுமன்ற தொகுதி எம்பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான காட்பாடியில் உள்ள வீடு, அவருக்கு சொந்தமான கல்லூரி மற்றும் உறவினரான காட்பாடு பள்ளிக்குப்பத்தை சேர்ந்த பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது உறவினர் தாமோதரன் ஆகியோருக்கு சொந்தமான 2 இடங்களில் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில் வழக்கு தொடர்பாக சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பகிறது. இருந்தாலும், வேலூர் எம்பி கதிர்ஆனந்த் வீட்டில் இருந்து எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. வேலூர் எம்பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை குறித்து தகவல் அறிந்த அவரது ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் சோதனை நடக்கும் காட்பாடியில் உள்ள அவரது வீட்டின் முன்பு குவிந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வருடன் துரைமுருகன் சந்திப்பு
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தனது மகனும் எம்பியுமான கதிர் ஆனந்த் மற்றும் சிலரது வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இல்லத்தில் அமைச்சர் துரைமுருகன் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
The post 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது பறக்கும்படை ரூ11 கோடி பறிமுதல் செய்த விவகாரம்: வேலூர் எம்பி கதிர்ஆனந்த் வீடு உட்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை appeared first on Dinakaran.