சென்னை: மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்து அரசாணை வெளியீடு தொடர்பாக பொதுமக்கள் தங்களது ஆட்சேபனைகளை 6 வாரங்களுக்குள் தெரிவிக்கலாம். முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தலைமைச் செயலகம் என்ற முகவரிக்கு கருத்துக்களை அனுப்பலாம். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சட்டத்தின்படி பரிசீலனை செய்யப்பட்டு இறுதிமுடிவு எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகளை இணைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் மற்றும் புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள் உருவாக்குவது தொடர்பாக 5 அரசாணைகள் வெளியிடப்படுகிறது.
தமிழ்நாடு நகரமயமாதலில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகர்ப்புற மக்கள் தொகை 48.45 சதவீதமாகவும், தற்போது நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் தொகை சதவீதம் மேலும் உயர்ந்துள்ளது. எனவே, மாநிலத்தின் மிக வேகமான நகரமயமாக்கலை கருத்திற்கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் எழுகின்றது.
மாநகராட்சிகள், நகராட்சிகள் போன்ற பெரியளவிலான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை சுற்றி அமைந்துள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள் போன்றவை நகரங்களின், பெருநகரங்களின் நுழைவாயிலாக அமைந்துள்ளதுடன், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் ஈட்டித் தருகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் பலவும் இவற்றில் அமைந்துள்ளன. இந்த பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் ஏராளமானோர் அருகில் உள்ள நகர்ப்புற பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள ஊராட்சிகளிலும் குடியிருந்து வருகின்றனர்.
மேற்கண்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் செய்வதற்கும், திட்டமிட்ட வளர்ச்சிக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு அவசியமாகிறது. எனவே நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை சுற்றி அமைந்துள்ள பகுதிகளுக்கும், நகர்ப்புறங்களுக்கு இணையான வகையில் சாலைகள், குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, திரவக்கழிவு மேலாண்மை, பொது, சமுதாய பயன்பாட்டிற்கான நவீன கழிப்பிடங்கள், பாதாளச் சாக்கடை கட்டமைப்பு, ஆற்றல்மிகு தெருவிளக்குகள் போன்ற மக்களுக்கான இன்றியமையாத அடிப்படை வசதிகளை விரிவுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
இதன்மூலம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்படும் பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் குடியிருக்கும் பொதுமக்களின் வாழ்க்கை தரம் உயர்வதுடன், அடிப்படை வசதிகள், கட்டமைப்பு மேம்பாடு, மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளும் மக்களுக்கு கிடைக்கும். இதன்மூலம், புதிய வேலைவாய்ப்பு உருவாகும்.
அரசு, நகரமயமாக்கலின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், நகர்ப்புறத்தினை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் நகரமயமாக்கலின் தன்மையினை பொறுத்து, கிராம ஊராட்சிகளை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுடன் இணைத்தும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்துதல், மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
The post உள்ளாட்சி எல்லைகள் விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.