சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் பாமக மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் தலைவர் அன்புமணி 3வது நாளாக ஆலோசனை

சென்னை: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பட்டானூரில் பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காலியாக உள்ள இளைஞர் சங்க தலைவர் பதவிக்கு தனது மகள் வழி பேரனான பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார். அப்போது மேடையில் இருந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினார். உடனே குறுக்கிட்ட டாக்டர் ராமதாஸ் இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும். கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது.

மாநில இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுகிறார். அவர் தலைவருக்கு உதவியாக இருப்பார் என்றார். இதையடுத்து கோபத்துடன் அங்கிருந்து காரில் அன்புமணி ராமதாஸ் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ஒரே மேடையில் டாக்டர் ராமதாசும், டாக்டர் அன்புமணி ராமதாசும் வார்த்தையால் மோதிக்கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வார்த்தையால் மோதி கொண்டதை தொடர்ந்து கடந்த 29-ம் தேதி திண்டிவனம் தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸை அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் பாமக கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் 2 நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார்.

அன்புமணியுடன் கருத்து வேறுபாடு இல்லை என ராமதாஸ் கூறிய நிலையில் இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் பாமக மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் தலைவர் அன்புமணி 3வது நாளாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கட்சியின் செயல்பாடுகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆலோசனையில் கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, திருவாரூர், பெரம்பலூர் மாவட்ட பாமக செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

The post சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் பாமக மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் தலைவர் அன்புமணி 3வது நாளாக ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: