முதல்வர் வேட்பாளர் பிரச்னை இந்தியா கூட்டணிக்கு மாறுகிறாரா நிதிஷ்..? பீகார் அரசியலில் குழப்பம்

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் இந்தியா கூட்டணிக்கு திரும்ப உள்ளதாக எழுந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார். பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. நிதிஷ்குமார் முதல்வராக உள்ளார். இங்கு இந்த வருடம் அக்டோபர்-நவம்பரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் நிதிஷ்குமார், இந்தியா கூட்டணிக்கு திரும்ப உள்ளதாக கடந்த சில வாரங்களாக பீகார் அரசியலில் பரபரப்பு எழுந்துள்ளது.

மகாராஷ்டிரா தேர்தல் முடிந்த பிறகு முதல்வர் பதவியை சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவுக்கு விட்டுக்கொடுக்காமல், பா.ஜவின் பட்நவிஸ் எடுத்துக்கொண்டதைப்போல் பீகாரிலும் முதல்வர் பதவி நிதிஷ்குமாருக்கு கிடைக்கும் வாய்ப்பு இல்லை என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளதால் நிதிஷ்குமார் மீண்டும் இந்தியா கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து நிதிஷ் தலைமையில் தான் பீகாரில் தேர்தலை சந்திப்போம் என்று பா.ஜ கூறியது.

இந்த சூழ்நிலையில், ‘நிதிஷ்குமாருக்கு எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன. அவர் தனது கதவுகளை திறக்க வேண்டும். இது இரு தரப்பிலிருந்தும் நட்பு நடமாட்டத்தை எளிதாக்கும்’ என்று லாலுபிரசாத் யாதவ் கூறியிருந்தார். பீகார் புதிய ஆளுநராக ஆரிப் முகமது கான் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட நிதிஷ்குமாரிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு நிதிஷ்,’ நீங்கள் என்ன சொல்கிறீர்கள்’ என்று பதில் கேள்வி எழுப்பினார். உடனே கூட்டணி அரசு பதவிக்காலத்தை முடிக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. உடனே ஆளுநர் குறுக்கிட்டு,’ எனது பதவியேற்பு விழாவில் இது மாதிரியான கேள்விக்கான சந்தர்ப்பம் இல்லை.

இன்று மகிழ்ச்சியான நாள். நல்ல விஷயங்கள் பற்றி மட்டும் பேசுவோம்’ என்றார். ஒன்றிய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், லாலுவுக்கு நெருக்கமான ராஜீவ் ரஞ்சன்சிங் லாலனிடம் இதுபற்றி கேட்ட போது,’பா.ஜ கூட்டணி வலுவாக உள்ளது. இருப்பினும் இது ஒரு சுதந்திர சமுதாயம். எனவே யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். லாலு தனது சொந்த கட்சியைப்பற்றி அதிகம் பேச வேண்டு’ என்றார்.
இதுபற்றி லாலு மகன் தேஜஸ்வி யாதவ் கூறுகையில்,’ புத்தாண்டில் நிதிஷ் தலைமையிலான பா.ஜ கூட்டணி அரசு கவிழும் என்ற எனது நிலைப்பாட்டை நான் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன்.

உங்களைப் போன்றவர்கள்(நிருபர்கள்) அவரிடம்(நிதிஷ்) தொடர்ந்து இதே கேள்வியைக் கேட்டால், அவர் என்ன செய்வார்? அவர் என்ன சொன்னாலும், பத்திரிகையாளர்களான உங்கள் ஆர்வத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் பதில் அளித்து இருப்பார்’ என்றார். இதனால் பீகார் அரசியலில் மீண்டும் குழப்பம் உருவாகி உள்ளது.

மோடி ஆட்சிக்கு ஆபத்தா?
மக்களவை தேர்தலில் பா.ஜ தனியாக 240 தொகுதிகளில் மட்டுமே வென்றது. பெரும்பான்மைக்கு 272 இடங்கள் வேண்டும். தற்போது நிதிஷ்குமாரின் 12 எம்பிக்கள், சந்திரபாபுநாயுடுவின் 16 எம்பிக்கள் உதவியுடன் கூட்டணி ஆட்சி நடத்துகிறார் மோடி. இந்தியா கூட்டணி பக்கம் நிதிஷ் சாய்ந்து விட்டால் மோடி ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post முதல்வர் வேட்பாளர் பிரச்னை இந்தியா கூட்டணிக்கு மாறுகிறாரா நிதிஷ்..? பீகார் அரசியலில் குழப்பம் appeared first on Dinakaran.

Related Stories: