பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை: தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகிற பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நடப்பு கல்வியாண்டில் (2025-26) அரசு பள்ளிகளில் 500 பள்ளிகள் அருகிலுள்ள தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு வழங்கப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருப்பதாக வந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்தது. ஆனால், பள்ளி கல்வித்துறை அமைச்சர் இன்று அதை முற்றிலும் மறுத்திருக்கிறார். இதை வரவேற்கிறேன்.

எதிர்காலத்தில் தனியார் துறையை வரவேற்கிற எந்த முடிவையும் எடுக்க வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே தனியார் பள்ளிகள் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லாமல் அதிக கட்டணத்தை வசூலித்து கல்வியை வணிகமயமாக்கி செயல்பட்டு வருகின்றன. ஒன்றிய பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத நிலையில் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய நிதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆசிரியர்களுக்கு 7 மாதங்களாக தமிழக அரசு தான் சம்பளம் வழங்கி வருகிறது. மேலும், தமிழக அரசு பள்ளிகளில் 2012 ஆம் ஆண்டு முதல் பகுதிநேர ஆசிரியர்களாக மொத்தம் 12,000 பேர் மாதம் ரூபாய் 12,500 தொகுப்பூதியம் பெற்று வருகிறார்கள்.

இன்றைய விலைவாசி உயர்வில் குறைந்தபட்ச ஊதியத்தை வைத்துக் கொண்டு பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். எனவே, தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகிற பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கையை மனிதாபிமானத்தோடு பரிசீலனை செய்ய வேண்டுமென தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: