சென்னை:: அண்ணாமலை பதவி ஏற்ற பிறகு, திடீரென நடிகை குஷ்பு பேட்டி அளிக்க அண்ணாமலை அனுமதி அளித்துள்ளார். அப்போது அவர் தான் என்றுமே கண்ணகிதான் என்று கூறினார். பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை பதவி ஏற்ற பிறகு மூத்த தலைவர்களை அவர் ஓரங்கட்ட ஆரம்பித்தார். இதனால் கட்சியில் இருந்து பலரும் வெளியேறினர். நடிகை குஷ்பு போன்றவர்கள் அமைதியாகிவிட்டனர். இந்தநிலையில்தான் பாஜக மாநில தலைமையில் இருந்து தனக்கு எந்த அழைப்பும் வருவதில்லை என்று நடிகை குஷ்பு கூறினார். அப்போது அண்ணாமலையும், நான் யாரையும் அழைப்பதில்லை. மாநில பொறுப்பாளர் கேசவ விநாயகம்தான் அழைப்பார் என்றார்.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று அளித்த பேட்டி: அண்ணாப்பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பிரச்னை தொடர்பாக, அந்த மாணவிக்கு ரூ.25 லட்சம் கொடுத்தாச்சு. கல்வியை இலவசமாக கொடுத்து விட்டோம் என்பதால் எல்லாம் சரியாகிவிடாது. அந்த மாணவிக்கு ஏற்பட்ட பிரச்னையை அவர் சாவுகிற வரைக்கும் மறக்க முடியாது. பெற்றோரிடம் அந்த துன்பம் இருக்க தானே செய்யும். பெண்களுக்கு பாலியல் தொல்லை நடக்கும் போது கட்சி ரீதியாக பேசக்கூடாது. இன்னைக்கு பாஜக ஆபிஸில் இருக்கிறோம்.
நாங்கள் பாஜக சார்பில் பேசவில்லை. ஒரு பெண் என்ற முறையில் பேசிக்கொண்டிருக்கிறோம். எனவே, இதை அரசியலாக்காதீர்கள். அந்த மாணவி தைரியமாக வெளியே வந்து பேசுகிறார். அதை நான் பாராட்டுகிறேன். மிரட்டல் விடுத்தும் அந்த மாணவிக்கு தைரியம் இருந்துள்ளது. நிறைய பெண்கள் பயத்தில் பேச மாட்டுக்கிறார்கள். அந்த மாணவி தொடர்பாக தகவலை வெளியே சொன்னவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். யார் கொடுத்தது. யார் கொடுக்க சொன்னது. அதை பற்றி யாரும் பேச மாட்டுக்கிறீங்க. எந்த மாநிலத்தில் பெண்களுக்கு பிரச்னை நடக்கும் போது கேவலப்படுத்த வேண்டாம்.
ஒட்டுமொத்தமாக நமது நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா? என்பதை நாம் பார்க்க வேண்டும். நான் என்னைக்குமே கண்ணகி தானே. புதுசு ஓன்னும் இல்லையே. சென்னைக்கு வந்து 38 வருடம் ஆகிவிட்டது. 38 வருடமாக கண்ணகியாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மனதில் பட்டதை பேசுவேன். மனதில் பட்டதை செய்வேன். அதில் எந்த மாற்றமும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
The post அண்ணாமலை பணிந்தார்; கட்சி அலுவலகத்தில் குஷ்பு பேட்டி அளிக்க அனுமதி: என்றுமே கண்ணகிதான் என்று பேட்டி appeared first on Dinakaran.