கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 30 கிராமங்களில் திடீர் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம்

சங்கராபுரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். நீண்ட நேரமாக தெருக்களில் அதிர்ச்சியுடன் நின்றனர். பின்னர் வீடுகளுக்கு திரும்பினர்.

இதேபோல் கள்ளக்குறிச்சி அருகே தாவடிப்பட்டு கிராமத்தில் நேற்று காலை 9.15 மணியளவில் பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டது. இதையடுத்து வீடுகளில் இருந்து அனைவரும் தெருவுக்கு ஓடி வந்தனர். இந்த சத்தம் 4 விநாடிகள் வரை இருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். அதேபோல் மாத்தூர், மண்மலை, கரடிசித்தூர், அக்கராயபாளையம், கச்சிராயபாளையம் ஆகிய பகுதிகளிலும் நில அதிர்வு இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நில அதிர்வு ஏற்படாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது இந்த பகுதி மக்களை பீதி அடைய செய்துள்ளது. நில அதிர்வு குறித்து பேரிடர் தகவல் மையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகே ஆத்திப்பாடி, புதூர்செக்கடி, பீமாராப்பட்டி ஆகிய மலை கிராமங்களிலும் நேற்று காலை 9.30 அளவில் சில நொடிகள் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறிதெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

The post கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 30 கிராமங்களில் திடீர் நில அதிர்வு: பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: