×

சென்னையில் 2024ம் ஆண்டில் 502 தாழ்தள பேருந்துகள் இயக்கம்: மாநகர் போக்குவரத்து கழகம் தகவல்

சென்னை: சென்னையில் இதுவரை 502 புதிய தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. சென்னையில் கடந்த 2018ம் ஆண்டு வரை தாழ்தள சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறும் வகையில் இந்த பேருந்துகள் இருந்தன. ஆனால், 2018ம் ஆண்டுக்கு பிறகு தாழ்தள சொகுசு பேருந்துகள் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படவில்லை. இந்நிலையில் தாழ்தள சொகுசு பேருந்துகளை இயக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சென்னையில் மீண்டும் தாழ்தள பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்த பேருந்துகளில், இறங்கு தளத்தின் உயரத்தை 60 மி.மீ குறைத்து பயணிகள் ஏறிய பிறகு, பழைய உயரத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதி, மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறி, இறங்குவதற்கு சாய்தள வசதி என பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த பேருந்தில் உள்ளன. முதற்கட்டமாக 17 வழித்தடங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், கூடுதல் வழித்தடங்களிலும் இயக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இதையடுத்து பல கட்டங்களாக வழித்தடங்களை அதிகரித்தும், ஏற்கெனவே இயக்கப்பட்ட வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளும் தாழ்தள பேருந்துகள் இயக்கப்பட்டது.

இந்நிலையில் 2024ம் ஆண்டின் முடிவில் மொத்தம் 502 தாழ்தள பேருந்துகள் 98 வழித்தடங்களில் சென்னை மாநகரில் இயக்கப்பட்டு வருவதாக மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதில் 21G(பிராட்வே – கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்) வழித்தடத்தில் அதிகபட்சமாக 24 பேருந்துகளும், அதையடுத்து E18(பிராட்வே – கூடுவாஞ்சேரி) வழித்தடத்தில் 21 பேருந்துகளும், 104C(கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்) வழித்தடத்தில் 19 பேருந்துகளும், D70(அம்பத்தூர் எஸ்டேட்- வேளச்சேரி ) வழித்தடத்தில் 18 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.

The post சென்னையில் 2024ம் ஆண்டில் 502 தாழ்தள பேருந்துகள் இயக்கம்: மாநகர் போக்குவரத்து கழகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Municipal Transport Corporation ,Dinakaran ,
× RELATED நெரிசலில் சிக்கி தாமதமாவதை தடுக்கும்...