சென்னை: நடந்து முடிந்த 2024ம் ஆண்டே கடந்த 123 ஆண்டுகளில் அதிக வெப்பமான ஆண்டு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு துறையின் தலைவர் மிருத்யஞ்செய் மொகோபாத்ரா காணொலி மூலம் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில் கடந்த 1901ம் ஆண்டுக்கு பிறகு 2024ம் ஆண்டுதான் வெப்பமான ஆண்டாக இருந்தது. நீண்டகால சராசரியைவிட இந்த ஆண்டில் 0.90 டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பம் இருந்தது.
2024ம் ஆண்டில் இந்தியா முழுவதும் சராசரியாக தரைக்காற்றின் வெப்பநிலை என்பது நீண்டகால சராசரியைவிட(1901-2020 காலகட்டத்தில்) 0.65 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. இந்நிலையில், 1901ம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது 2024ம் ஆண்டு கடந்த 123 ஆண்டுகளில் அதிக வெப்பமான ஆண்டாக இப்போது தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இது கடந்த 2016ம் ஆண்டைவிட அதிகம். அதாவது கடந்த 2016ம் ஆண்டில் சராசரி தரைக்காற்றின் வெப்பநிலை இயல்பைவிட 0.54 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.
தற்போது 2025ம் ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், வட இந்திய பகுதியில் அடங்கிய கிழக்கு உத்ரபிரதேசம், மேற்கு உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் 86 சதவீதத்துக்கும் கீழ் மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்றும், நாடு முழுவதும் பருவகால மழை மேற்கண்ட மாதங்களில் 88 முதல் 112 சதவீதம் இயல்பாக இருக்கும் என்றும், கணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 2025 ஜனவரி மாதம் மட்டும் வட இந்தியப் பகுதியில் 122 சதவீத்துக்கு குறைவாகவும், நாடு முழுவதும் பெரும்பாலும் இயல்பைவிட 118 சதவீதம் கூடுதலாகவும் பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் இயல்பைவிட கூடுதலாக மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்பநிலையை பொருத்தவரையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஜனவரியில் இயல்பைவிட கூடுதாக வெப்பநிலை நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், ஜனவரி மாதம் வட மேற்கு, மத்திய மற்றும் அதை ஒட்டிய கிழக்கு இந்தியப் பகுதிகள் மற்றும் தென்னிந்தியாவின் மத்திய பகுதிகள் தவிர பெரும்பாலான பகுதிகளில் இயல்பைவிட குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
* தென்இந்தியாவில் அதிக மழை கொட்டியது
2024ம் ஆண்டில் வட மாநிலங்களை விட தென்னிந்தியப் பகுதிகளில் அதிக அளவில் மழை பொழிவு இருந்தது. குறிப்பாக தென்னிந்திய பகுதியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் இயல்பைவிட கூடுதலாக மழை பெய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெய்து வரும் வட கிழக்குபருவமழை இன்னும் முடிவடையாத நிலையில் நேற்று(1.1.2025) மட்டும் தமிழ்நாட்டில் இயல்பைவிட 41 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஜனவரி மாதத் தொடக்கமான நேற்று கணிசமாக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், கோவை மாவட்டத்தில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியசுக்கும் அதிமாகவே வெப்பநிலை இருந்தது. திருப்பத்தூர், காரைக்கால் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையும் வெப்பநிலை இருந்தது. அதேபோல சென்னை, நாகப்பட்டினம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. கரூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக வெப்பநிலை இருந்தது.
The post 123 ஆண்டில் இல்லாத வகையில் 2024ல் அதிக வெப்பம் பதிவு: இந்திய வானிலை மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.