புதுடெல்லி: இந்த ஆண்டு மார்ச் வரை சிறுசேமிப்பு வட்டிவிகிதம் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடரும் என்று ஒன்றிய அரசு அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்,
பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 2025 ஜனவரி 1 முதல் தொடங்கி 2025 மார்ச் 31 வரை முடியும் காலாண்டில் வட்டி விகிதங்களில் எந்தவித மாற்றமும் இல்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சுகன்யா சம்ரித்தி திட்டத்தின் கீழ் டெபாசிட்களுக்கு 8.2 சதவீதம் வட்டி கிடைக்கும். அதே நேரத்தில் மூன்றாண்டு கால டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் நடப்பு காலாண்டில் 7.1 சதவீதமாகவே உள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) 7.1 சதவீதமும், தபால் அலுவலக சேமிப்பு வைப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 4 சதவீதமும், கிசான் விகாஸ் பத்திரத்தின் வட்டி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும்.
இது தொடர்பான முதலீடுகள் 115 மாதங்களில் முதிர்ச்சியடையும். தேசிய சேமிப்புச் சான்றிதழின் (என்எஸ்சி) வட்டி விகிதம் 2025 ஜனவரி-மார்ச் காலகட்டத்தில் 7.7 சதவீதமாக இருக்கும். நடப்பு காலாண்டைப் போலவே, மாதாந்திர வருமானத் திட்டமும் முதலீட்டாளர்களுக்கு 7.4 சதவீதத்தை ஈட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த நான்கு காலாண்டுகளாக வட்டி விகிதங்கள் மாற்றப்படாமல் உள்ளது.
The post ஜனவரி முதல் மார்ச் வரை சிறு சேமிப்பு வட்டி விகிதம் மாற்றமில்லை: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.