- சபரிமலை
- திருவனந்தபுரம்
- சபர்மதி அய்யப்பன் கோயில்
- பிரசாந்த்
- திருவிடங்கூர் தேவாசம்
- குழு
- பிரஷாந்த் சபரிமலை
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல காலத்தில் 32,49,756 பக்தர்கள் தரிசனம் செய்தனர் என்றும், ₹297.06 கோடி மொத்த வருமானம் கிடைத்துள்ளது என்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறினார். திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் சபரிமலையில் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலையில் மண்டல காலத்தில் எந்த சிரமமும் இல்லாமல் பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்து திரும்பினர். முந்தைய வருடங்களை விட இந்த வருடம் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. பெண்கள், குழந்தைகள், வயதானவர்களுக்கு தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது.
வரிசையில் காத்திருப்பவர்களுக்கு குடிநீர், பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டன. பம்பை மற்றும் நிலக்கல்லில் வாகனங்கள் நிறுத்துவதற்கு அதிக வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. தினமும் 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்க தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் அதைவிட அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்தனர். ஆனாலும் அனைவருக்கும் எளிதில் தரிசனம் கிடைக்க உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த மண்டல காலத்தில் 42 நாட்களில் 32 லட்சத்து 49 ஆயிரத்து 756 பக்தர்கள் தரிசனம் செய்து திரும்பினர். கடந்த வருடம் மண்டல காலத்தில் 28 லட்சத்து 42 ஆயிரத்து 447 பேர் வந்தனர். கடந்த வருடத்தை விட இந்த வருடம் 4 லட்சத்து 7 ஆயிரத்து 309 பேர் கூடுதலாக வந்துள்ளனர். இந்த மண்டல காலத்தில் மொத்தம் ₹297.06 கோடி வருமானம் கிடைத்துள்ளது.
கடந்த வருடம் ₹214.82 கோடி வருமானம் கிடைத்தது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் ₹82.23 கோடி வருமானம் கூடுதலாக கிடைத்துள்ளது. இந்த முறை அரவணை பிரசாத விற்பனை மூலம் தான் அதிகமாக ₹124 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த வருடத்தை விட ₹22 கோடிக்கு மேல் அதிகமாகும். காணிக்கை மூலம் ₹80.25 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த வருடத்தை விட ₹13.28 கோடி அதிகமாகும்.
உடனடி முன்பதிவு வசதியை பயன்படுத்தி இந்த வருடம் 5 லட்சத்து 66 ஆயிரத்து 571 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்த வருடம் 4 லட்சத்து 2 ஆயிரத்து 269 பேர் தரிசனம் செய்தனர். புல்மேடு வழியாக இந்த மண்டல காலத்தில் 74 ஆயிரத்து 774 பேர் வந்தனர். கடந்த வருடம் 69 ஆயிரத்து 250 பக்தர்கள் இந்த வனப்பாதை வழியாக வந்து தரிசனம் செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
The post சபரிமலையில் மண்டல காலத்தில் 32.5 லட்சம் பக்தர்கள் தரிசனம்: மொத்த வருமானம் ₹297 கோடி appeared first on Dinakaran.