புதுடெல்லி: ரயில்வேயில் லெவல்-1 பதவிகளுக்கான குறைந்தபட்ச கல்வி தகுதிகளை ரயில்வே வாரியம் தளர்த்தி உள்ளது. ரயில்வேயில் லெவல்-1 பதவிகளில்(முன்பு குருப்-டி) பல்வேறு துறைகளில் உதவியாளர்கள், பாயின்ட்மேன்கள் மற்றும் டிராக் மெயின்டெய்னர்கள் உள்ளனர். லெவல்-1 பதவிகளில் சுமார் 32,000 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே வாரியம் சமீபத்தில் வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான நடைமுறைகள் இந்த மாதம் தொடங்குகிறது.
இந்த நிலையில்,லெவல் 1 பதவிகளுக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி விதிமுறைகளை ரயில்வே வாரியம் தளர்த்தியுள்ளது. இதுகுறித்து ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது ஐடிஐ டிப்ளமோ அல்லது அதற்கு சமமான பயிற்சி பெற்றவர்கள் அல்லது தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில்(என்சிவிடி) வழங்கிய தேசிய பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் லெவல் 1 பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் தொழில்நுட்ப பிரிவு துறை பணிகளுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய பயிற்சி சான்றிதழுடன் ஐடிஐ டிப்ளமோ கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. அது தற்போது தளர்த்தப்பட்டுள்ளது.
The post ரயில்வேயில் லெவல்- 1 பதவிக்கான கல்வி தகுதி தளர்வு: ரயில்வே வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.