- அமலாக்க இயக்குநரகம்
- உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- ஹரியானா காங்கிரஸ்
- சட்டமன்ற உறுப்பினர்
- சுரேந்திர பன்வர்
- பஞ்சாப்
- ஹரியானா உயர் நீதிமன்றம்
- தின மலர்
புதுடெல்லி: அரியானா மாநில காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சுரேந்திர பன்வார் என்பவரை சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் சுரங்க முறைகேடு வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமலாக்கத்துறை கைது செய்தது. பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சுரேந்திர பன்வார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.
மேற்கண்ட பஞ்சாப், அரியானா உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சுரேந்தர் பன்வார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘‘அரசியல் உள்நோக்கத்துடன் பன்வார் மீது அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எடுத்துள்ளது. அரியானாவில் சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில், அவரது அரசியல் எதிர்காலத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை தரப்பு வாதத்தில்,‘‘பி.எம்.எல்.ஏவின் சட்டப் பிரிவு 50ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஆவணங்கள், போதுமான சான்றுகள், சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளில் சுரேந்தர் பன்வாருக்கும் பிற குற்றவாளிகளுக்கும் உள்ள தொடர்புகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட ரூ.26 கோடி அளவுக்கு அவர் ஆதாயமடைந்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், “இந்த விவகாரத்தில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான அமலாக்கத்துறையின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக முன்னதாக உயர் நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவில் கைது செய்வதற்கான சட்டப்பூர்வ நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றே கூறப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணைக்கு உட்படுத்தும் போது தேவையற்ற துன்புறுத்தல்கள் இல்லாத அளவுக்கு தடுப்பு நடவடிக்கை வேண்டும். அதனை அமலாக்கத்துறை கருத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் விசாரணை அமைப்புகள் நியாயமான கால வரம்புகளை பின்பற்ற வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையால் வகுக்கப்பட்ட மனித உரிமைகள் பின்பற்றப்பட வேண்டும். கைதான சுரேந்தர் பன்வாரை தொடர்ந்து 15 மணி நேரம் விசாரணை நடத்தியது மனிதாபிமானமற்ற செயலாகும்” எனக்கூறி வழக்கை முடித்து வைத்துள்ளது.
The post உணவு கூட தராமல் 15 மணி நேரம் விசாரணை; அமலாக்கத்துறைக்கு மனிதாபிமானம் கிடையாதா..? உச்ச நீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.