திருப்போரூர் பகுதியில் கரடி நடமாட்டமா? வனப்பகுதிக்குள் செல்லத் தடை

திருப்போரூர்: திருப்போரூர் அருகே வனப்பகுதியில் கரடியைப் பார்த்ததாக முதியவர் தகவல் அளித்துள்ளதால், காட்டுக்குள் செல்லக்கூடாது என பொதுமக்களுக்கு, வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. திருப்போரூர், தண்டலம், செம்பாக்கம், மடையத்தூர், இள்ளலூர், காட்டூர், கொட்டமேடு, கீழூர், மாம்பாக்கம், பொன்மார், சோனலூர், புதுப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி உள்ளது. இங்கு புள்ளி மான்கள், மிளா மான்கள், முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, எறும்புத்தின்னி. புனுகுப்பூனை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அரிய வகை வன விலங்குகள் உள்ளன.

திருப்போரூர் வனச்சரகத்தின் கீழ் இந்த வனப்பகுதி, பொதுமக்கள் அத்து மீறி உள்ளே நுழைய தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்போரூரை அடுத்துள்ள செம்பாக்கம் கிராமம், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (65) என்பவர் நேற்று காலை இயற்கை உபாதைக்காக தனது நாயுடன் வனப்பகுதிக்குள் சென்றார். அவர், நடந்து சென்றபோது அவருக்கு முன்னால் நாய் சென்று கொண்டிருந்தது. தட்டான்குளம் என்ற இடத்தில் சென்றபோது திடீரென முன்னே சென்று கொண்டிருந்த நாய் வேகமாக திரும்பி ஓடி வந்தது.

இதனால் பயந்துபோன விஸ்வநாதன், நாய் ஓடி வந்த திசையை பார்த்தபோது சுமார் 2 அடி உயரத்தில் இருந்த கருமை நிற கரடி ஒன்று நாயை துரத்தியிருப்பது தெரிந்தது. இதையடுத்து சத்தம் போட்டு கரடியை விஸ்வநாதன் விரட்டத் தொடங்கினார். அப்போது, கரடி சத்தத்தை கேட்டு வேகமாக காட்டுக்குள் ஓடி மறைந்தது. விஸ்வநாதன் கரடியைப் பார்த்தது குறித்து செம்பாக்கம் கிராமம் முழுவதும் பரவியது. இதையடுத்து செம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், திருப்போரூர் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் திருப்போரூர் வனச்சரக அலுவலர் பொன் செந்தில் மற்றும் 2 வனவர்கள் கரடிய உலவியதாக கூறப்பட்ட பகுதியில் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, வனச்சரக அலுவலர் பொன் செந்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்; “பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் வனப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டோம். குறிப்பாக, திருப்போரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள காட்டுப் பகுதியில் கரடிகள் வாழ்வதற்கான சூழல் இல்லை. வேலூர் வனப்பகுதியில் கரடிகள் வாழ்கின்றன, அவை இவ்வளவு தூரம் வருவதற்கான வாய்ப்பு இல்லை.

ஆகவே, நன்கு வளர்ந்த காட்டுப்பன்றி அல்லது முள்ளம்பன்றியைப் பார்த்து அவர் கரடி என்று நினைத்து இருக்கலாம். இருப்பினும் பொதுமக்கள் எந்த காரணத்திற்காகவும் வனப் பகுதிக்குள் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளோம். தொடர்ச்சியான கண்காணிப்பில் இருப்பதால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. எனவே, யாரும் அச்சப்பட தேவையில்லை’’ என்றார். இருப்பினும் கரடி நடமாட்டத்தால் செம்பாக்கம், மடையத்தூர், கொட்டமேடு கிராம மக்கள் ஒருவித அச்சத்துடன் உள்ளனர்.

The post திருப்போரூர் பகுதியில் கரடி நடமாட்டமா? வனப்பகுதிக்குள் செல்லத் தடை appeared first on Dinakaran.

Related Stories: