கூட்டத்தில் 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ் பேசுகையில், ‘மாநகராட்சி பணிகளை செய்ய நிதி பங்கீட்டின்போது அனைத்து மண்டலங்களுக்கும் சமமாக வழங்க வேண்டும்,’ என்றார். மனிதநேய மக்கள் கட்சி மாமன்ற உறுப்பினர் யாக்கூப் பேசுகையில், ‘முத்துரங்கம் தெருவில் நடைபாதை சீரமைப்பு பணிகள் நடைபெறும் போது சாலையோர வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறான தகவல்களை மாநகராட்சி ஆணையருக்கு அதிகாரிகள் தெரிவிக்க கூடாது,’ என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர் பேசுகையில், ‘பல்லாவரம் கழிவுநீர் சம்பவ உயிரிழப்பு குறித்து குடிநீரின் தரம் குறித்த கிங் இன்ஸ்டிடியூட்டில் முடிவுகளை வெளிப்படையாக அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்க வேண்டும்,’ என பேசியபோது திமுக மண்டலக்குழு தலைவர்கள், திமுக உறுப்பினர்கள் இந்த விஷயத்தை இங்கு பேசக்கூடாது எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர் கூறுகையில், கடந்த முறை மாமன்ற கூட்டம் நடந்தபோது தீபாவளிக்காக தீர்மானங்களை கொண்டு வந்து நடத்தினார்கள். இந்த கூட்டம் என்பது பொங்கலுக்கான கூட்டம். மக்கள் குறித்த பிரச்னைகள் ஏதும் கூட்டத்தில் பேசப்படவில்லை.
கழிவுநீர் விவகாரம் தொடர்பாக கிங் இன்ஸ்டிடியூட் அளித்த அறிக்கையை கவுன்சிலர்களுக்கு வெளியிடுமாறு கேட்டபோது பேசவிடாமல் தடுத்து விட்டார்கள். குடிநீரில் எந்த பாதிப்பும் இல்லை என்று சோதனை முடிவு இருந்தால் அதை வெளிப்படையாக வெளியிடுவதற்கு ஏன் தயங்குகிறார்கள். தாம்பரம் மாநகராட்சியில் நிலவும் அவலம் குறித்து அதிமுக தலைமையின் ஒப்புதலோடு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
The post பல்லாவரம் குடிநீர் உயிரிழப்பு விவகாரம் தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம் appeared first on Dinakaran.
