பாகு: அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 25ம் தேதி 67 பயணிகளுடன் ரஷ்யாவின் குரோஸ்னி நகருக்கு சென்ற போது, அங்கு தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால், கஜகஸ்தானின் அக்தாவ் விமான நிலையம் அருகே தரையில் மோதி தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் 38 பயணிகள் பலியாகினர். 29 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இதற்கிடையே நேற்று முன்தினம் ரஷ்ய அதிபர் புடின், அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டார். இந்த விபத்து மோசமான சம்பவம் என குறிப்பிட்டார். மேலும், விமானம் விபத்துக்குள்ளான சமயத்தில் ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பாட்டில் இருந்ததாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் அறிக்கை வெளியிட்டது. ஆனால், விமானத்தை தாக்கியதாக ரஷ்யா நேரடியாக ஒப்புக் கொள்ளவில்லை.
இந்நிலையில், அஜர்பைஜான் அதிபர் அலியேவ் நேற்று அந்நாட்டு அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘‘விமானத்தை ரஷ்யா தான் சுட்டு வீழ்த்தியது என்பதை உறுதியாக கூறலாம். ஆனால் அது வேண்டுமென்றே செய்யப்பட்டதாக நாங்கள் கருதவில்லை. தவறுதலாக நடந்து விட்டது. அதே சமயம், இந்த விஷயத்தை நீண்ட காலம் மூடி மறைக்க ரஷ்யா முயற்சித்துள்ளது. விபத்து நடந்த பிறகு ரஷ்ய அதிகாரிகள் ஏமாற்றும் விதமான தகவல்களை பரப்பியது அதிருப்தியையும் ஆச்சரியத்தையும் தருகிறது. இந்த விவகாரத்தில் ரஷ்யா குற்றத்தை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள வேண்டும். குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும், கொல்லப்பட்டவர் களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றார்.
இதற்கிடையே, ரஷ்ய அதிபர் புடின் நேற்றும் அலியேவிடம் தொலைபேசியில் பேசி உள்ளார். அதன் விவரங்களை ரஷ்யா வெளியிடவில்லை.
The post ரஷ்யா மீது அஜர்பைஜான் அதிபர் குற்றச்சாட்டு; விமானத்தை தாக்கியதை மறைக்க முயற்சித்தனர் appeared first on Dinakaran.