டாக்கா: வங்கதேசத்தில் தேர்தல் நடத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து கடந்த மாதம் 16ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், “2026ம் ஆண்டு தொடக்கத்தில் தேர்தல்கள் நடத்தப்படலாம்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் வங்கதேச தேர்தலில் அவாமி லீக் கட்சி போட்டியிட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து வங்கதேச தலைமை தேர்தல் ஆணையர் ஏஎம்எம் நசீர் உதீன் நேற்று டாக்காவில் தேர்தல் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நசீர் உதீன், “ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு அரசாங்கம் அல்லது நீதித்துறை தடை விதிக்கும் வரை அந்த கட்சி தேர்தலில் போட்டியிட எந்த தடையும் இல்லை. தேர்தலை அமைதியாகவும், வௌிப்படைத்தன்மையுடனும் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் வாக்களார் பட்டியல் புதுப்பிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
The post நீதித்துறை தடை விதிக்கும் வரை அவாமி லீக் தேர்தலில் போட்டியிட தடை இல்லை: வங்கதேச தேர்தல் ஆணையம் விளக்கம் appeared first on Dinakaran.