திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய பகுதிகளில் சீரமைப்பு பணிகள் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நேற்று ஆய்வு செய்தார். இதுகுறித்து ஆட்சியர் கூறியதாவது:முகையூர் ஊராட்சி ஒன்றியம் எமப்பேர் அருகே தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் திருக்கோவிலூர் அணைக்கட்டு இடதுபுற பகுதி, பம்பை வாய்க்கால் மற்றும் அறுமலை ஏரி வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டு விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் கனமழை வெள்ளத்தினால் திருக்கோவிலூர் அணைக்கட்டு பகுதியில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மற்றும் கற்களை கொண்டு நீர் வெளியேறாத வண்ணம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டு, சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அணைகட்டு பகுதியில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக 12 ஹெக்டேர் விவசாய நிலங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விவசாய நிலங்களில் உள்ள தரை கிணறு, ஆழ்துளை கிணறுகள், மோட்டார்கள் போன்றவை முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால் இதற்கான நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் நிவாரணம் விரைந்து வழங்கப்படும்.
மேலும் கனமழை வெள்ளத்தினால் சேதமடைந்த அரகண்டநல்லூர் ஏமப்பேர் சாலையை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை ஆய்வு செய்ததுடன், ஏமப்பேர் குடியிருப்பு பகுதியில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றார்.
ஆய்வின்போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் சோபனா, ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் ராஜா, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சுமதி, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஐயப்பன், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் நாராயணலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகநாதன்,சண்முகம் ,கண்டாச்சிபுரம் வருவாய் வட்டாட்சியர் கிருஷ்ணதாஸ், ஏமப்பேர் ஊராட்சி மன்ற தலைவர் வனஜா, துணை தலைவர் முருகன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.
The post திருக்கோவிலூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை ஆட்சியர் ஆய்வு appeared first on Dinakaran.