இயற்கை முறையில் பயிர்சாகுபடி; முதலமைச்சரிடம் விருது பெற்ற விவசாயிக்கு பாராட்டு விழா

திருத்தணி: இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளை ஊக்கப்படுத்தி வரும் காஞ்சிபுரம் சேர்ந்த எழில் என்ற விவசாயி, பிரதம மந்திரி நரேந்திர மோடி மான் கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் பாராட்டப்பட்டார். இந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழக அரசின் சார்பில் முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் இயற்கை விவசாயி ஏழிலுக்கு நம்மாழ்வார் விருது மற்றும் ஒரு லட்சம் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டப்பட்டது.

இந்நிலையில், திருத்தணி அருகே நொச்சிலி கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் கூட்டு இயக்கத்தின் சார்பில், இயற்கை விவசாயி எழிலுக்கு பாராட்டு விழா அச் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஓய்‌‌.வேணுகோபால்ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது‌. திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்கே பேட்டை, திருவாலாங்காடு சுற்றுவட்டார பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் கூட்டு இயக்கத்தின் மாநிலத் தலைவர் தெய்வசிகாமணி, மாநில செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னோடி விவசாயி பூண்டி சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி வரும் காஞ்சி ஏழிலுக்கு மலர் மாலை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இயற்கை விவசாயம் சாகுபடி முறைகள் குறித்து, மகசூல் பெருக்கும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியை தொடர்ந்து தெய்வசிகாமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் மற்றும் கடந்த வாரம் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள நெல், கரும்பு, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை தமிழக அரசு உடனடியாக கணக்கீடு செய்து நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட வேண்டும். விவசாய பணிகளுக்கு கூலி ஆட்கள் பற்றாக்குறை தீவிரமடைந்து வரும் நிலையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றங்கள் செய்து கூலி ஆட்கள் விவசாய பணிகளுக்கு ஈடுபடுத்தும் வகையில் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சாந்தி பிரியா சுரேஷ், விவசாய சங்க நிர்வாகிகள் கிரி,பாலாஜி, சுதாகர் ராஜ், நாகபூண்டி ஜெகன், பாபு, அருங்குளம் நாககுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post இயற்கை முறையில் பயிர்சாகுபடி; முதலமைச்சரிடம் விருது பெற்ற விவசாயிக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: