நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கொடுமுடியாறு அணை அமைந்துள்ளது. திருக்குறுங்குடி-பணகுடி சாலையில் இருந்து அணைக்கு செல்லும் 5 கி.மீ தூரமுள்ள சாலை நீர்வளத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. கொடுமுடியாறு அணை கட்டப்பட்ட போது இந்த சாலை அமைக்கப்பட்டது.
அதன்பின் கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை சீரமைக்கப்படவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மண் மேடுகளும் உருவாகியுள்ளன. கற்களாகவும் சிதறி கிடக்கிறது. போக்குவரத்திற்கே பயனற்ற வகையில் சாலை மிகவும் பழுதடைந்து உருக்குலைந்து கிடக்கிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.
தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நீச்சல் குளம் போல் காட்சி அளிக்கிறது. அத்துடன் சாலையும் சகதி காடாக மாறியுள்ளது. கொடுமுடியாறு அணைக்கு மட்டுமின்றி அணை பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்கும் இந்த சாலை வழியாகவே செல்ல வேண்டும். சாலை பழுதடைந்து கிடப்பதால் விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு டிராக்டர் மற்றும் வாகனங்களில் இடு பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
அறுவடை காலங்களிலும் வாழைத்தார் மற்றும் நெல்லை விளைநிலங்களில் இருந்து கொண்டு வருவது பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சகதியாக இருப்பதால் சாலை பள்ளங்களில் வாகனங்கள் சிக்கி திணறுகின்றன. எனவே கொடுமுடியாறு அணைக்கு செல்லும் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருக்குறுங்குடி அருேக 21 ஆண்டுகளாக பராமரிக்கப்படாத சாலை appeared first on Dinakaran.