மின்னணு ஆவண விதியில் திருத்தம் தேர்தல் ஆணையத்தை சிதைக்கும் மோடி அரசு: கார்கே கடும் தாக்கு

புதுடெல்லி: ‘‘ தேர்தல் ஆணையத்தை மோடி அரசு திட்டமிட்டு சிதைத்துள்ளது’’ என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறி உள்ளார். வாக்குச்சாவடிகளின் சிசிடிவி மற்றும் வெப்காஸ்டிங் காட்சிகள் போன்ற மின்னணு ஆவணங்கள் வெளியிடுவதை கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தை விதிமுறையில் ஒன்றிய அரசு மாற்றம் செய்தது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

தேர்தல் நடத்தை விதிமுறையில் மோடி அரசு செய்துள்ள திருத்தம், தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை அழிக்கும் திட்டமிட்ட சதியின் மற்றொரு தாக்குதல். இதற்கு முன், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் தேர்வுக்குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கினார்கள். இப்போது, உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கூட, மின்னணு ஆவணங்கள் வெளியாகாமல் தடுக்க தேர்தல் விதியை மாற்றி இருக்கிறார்கள்.

வாக்காளர் நீக்கம், இவிஎம்களில் வெளிப்படைத்தன்மை இல்லாமை போன்ற முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் ஒவ்வொரு முறை புகார் அளிக்கும் போதும் அவற்றை தேர்தல் ஆணையம் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்கிறது. இதுவே, தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை என்பதை நிரூபிக்கிறது. தேர்தல் ஆணையத்தை சிதைக்கும் இந்த முயற்சி அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் மீதான நேரடி தாக்குதல். அவற்றை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மின்னணு ஆவண விதியில் திருத்தம் தேர்தல் ஆணையத்தை சிதைக்கும் மோடி அரசு: கார்கே கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: