*164 கிராம் தங்கமும், 1 கிலோ வெள்ளியும் கிடைத்தது
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை ஒவ்வொரு மாதமும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணுவது வழக்கம். அதன்படி, ஐப்பசி மாத பவுர்ணமி உண்டியல் காணிக்கை கடந்த மாதம் 28ம் தேதி எண்ணப்பட்டது.
இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4ம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டு தீபத்திருவிழாவை தரிசனம் செய்தனர்.
கார்த்திகை தீபத்திருவிழா நிறைவடைந்த நிலையில், அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடந்தது.
கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழுத்தலைவர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர்கள் ஆகியோர் முன்னிலையில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது.
மேலும், பக்தர்கள் நேரடியாக பார்க்கும் வசதியாக திருக்கோயில் வலைதளத்தில் (யூடியூப்) ஒளிபரப்பப்பட்டது. அப்போது, கோயில் உண்டியலில் ரூ.2 கோடியே 83 லட்சத்து 92 ஆயிரத்து 520 யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
மேலும், 164 கிராம் தங்கம், 1 கிலோ வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியலில் செலுத்தப்பட்டிருந்தது. பின்னர், உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிந்ததும், அந்த தொகை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.
இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்ற அனைத்து நாட்களிலும் அதிகபட்ச எண்ணிக்கையில் பக்தர்கள் கோயிலுக்குள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர். அதோடு, தரிசனத்திற்காக வரிசையில் செல்லும் வழிகளில், பக்தர்கள் எளிதில் காணிக்கை செலுத்த வசதியாக மிகப்பெரிய அளவிலான உண்டியல்கள் கோயில் நிர்வாகத்தால் அமைக்கப்பட்டன.
மேலும், மகாதீபத்தன்று தொடங்கி பவுர்ணமி வரை 3 நாட்களில் மட்டும் 1.80 லட்சம் பக்தர்கள் கோயிலுக்குள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, இதுவரை எப்போதும் இல்லாத அளவில் இந்த ஆண்டு தீபத்திருவிழா உண்டியல் காணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத்திருவிழா உண்டியல் எண்ணிக்கை ₹2.83 கோடி appeared first on Dinakaran.