அண்ணாமலை வதந்தி பரப்புகிறார்: அமைச்சர் கீதாஜீவன் தாக்கு

நாகர்கோவில்: தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: பலமுறை விளக்கம் அளித்தும் கூட திரும்ப திரும்ப பொய்குற்றச்சாட்டை எழுப்பி அரைவேக்காட்டுத்தனமாக வதந்தியை பரப்ப முயலும் அண்ணாமலைக்கான பதில் அறிக்கை.

கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் பகுதி ஒன்றியத்தில் மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டதாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை ஒரு அரைவேக்காட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளார். உண்மை என்னவெனில், மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு கிராம தொடக்கப்பள்ளி, குழித்துறையில் உள்ள மையத்திற்கு வாரத்திற்கு தேவையான 197 முட்டைகள் பெறப்பட்டதில், 192 முட்டைகள் நல்ல நிலையிலும், 5 முட்டைகள் அழுகிய நிலையிலும் இருந்ததை சத்துணவு அமைப்பாளர்கள் கண்டறிந்து அவற்றை பயன்படுத்தாமல் தனியாக எடுத்து வைத்துள்ளனர்.

அதே போல குழித்துறை அரசு கிராம தொடக்கப்பள்ளி மையத்திலும் 96 முட்டைகள் பெறப்பட்டதில் ஒரு முட்டை மட்டும் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இந்த முட்டையும் தனியாக எடுத்து வைக்கப்பட்டுள்ளது. சமையலுக்கு முன்பு அனைத்து முட்டைகளும் நல்ல நிலையில் உள்ளதா? என்பதை ஆராய்ந்து அறிந்த பின்னரே, மாணவர்களுக்கு முட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அழுகிய முட்டைகளுக்கு பதிலாக நல்ல முட்டைகளும் சம்பந்தப்பட்ட முட்டை விநியோகஸ்தர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என்ற பொய்யான செய்தியினை, ஆராயாமல் எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல், அண்ணாமலையால் எப்படிதான் இப்படி அறிக்கை விட மனம் வருகிறதோ தெரியவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு, குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. எந்த நிலையிலும் அழுகிய முட்டைகள் ஒரு குழந்தைக்கு கூட வழங்கப்படவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக மீண்டும் ஆதாரத்துடன் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அண்ணாமலை வதந்தி பரப்புகிறார்: அமைச்சர் கீதாஜீவன் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: