அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 3.5 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் இன்று (18.12.2024) சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.

சென்னை, திருவல்லிக்கேணி, அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான சர்வே எண் 826/1-ல் 560 சதுரடி பரப்பிலான வணிக மனை மற்றும் சர்வே எண் 826/8 -ல் 2,886 சதுரடி பரப்பிலான குடியிருப்பு மனை என மொத்தம் 3,446 சதுரடி சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்தன.

இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78-ன் கீழ், சென்னை மண்டலம்-2 இணை ஆணையர் உத்தரவின் படியும், ஆணையர் அவர்களின் சீராய்வு மனு தீர்ப்பின் படியும், இந்த சொத்துகள் உதவி ஆணையர் கி.பாரதிராஜா அவர்கள் முன்னிலையில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. இதன் தற்போதைய மதிப்பு சுமார் ரூ. 3.5 கோடி ஆகும்.

இந்நிகழ்வின் போது வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) திருவேங்கடம், திருக்கோயில் செயல் அலுவலர் ரமேஷ், சரக ஆய்வளார் உஷா, சிறப்புப் பணி செயல் அலுவலர்கள் குமரேசன், செந்தில், தினகரன், நித்யானந்தம், சுசில்குமார் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

The post அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 3.5 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: