3வது டெஸ்டில் வெற்றிக்கு இலக்கு 658 ரன்: தோல்வி வலையில் சிக்கிய இங்கிலாந்து.! வெற்றி மீனுக்கு காத்திருக்கும் நியூசிலாந்து

ஹாமில்டன்: இங்கிலாந்து 3வது டெஸ்ட்டில் ஹாட்ரிக் வெற்றி பெற 658 ரன் இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து. இன்னும் 2 நாள் ஆட்டம் மீதமுள்ளதால் தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து போராடி வருகிறது. நியூசிலாந்து-இங்கிலாந்து இடையே 3வது டெஸ்ட் ஹாமில்டனில் நடக்கிறது. முதலில் விளையாடிய நியூசி முதல் இன்னிங்சில் 97.1 ஓவரில் 347ரன் குவித்திருந்தது. அதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து வீரர்கள், நியூசி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 35.4 ஓவருக்கு 143ரன்னுக்கு சுருண்டனர். இங்கிலாந்து குறைந்த ரன் எடுத்திருந்தாலும் நியூசி ‘பாலோ ஆன்’ தராமல் 2வது இன்னிங்சை விளையாடியது. அந்த அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 32 ஓவருக்கு 3 விக்கெட் இழந்து 136 ரன் எடுத்திருந்தது.

இந்நிலையில் 3வது நாளான நேற்று 340 ரன் முன்னிலையுடன் நியூசி வீரர்கள் கேன் வில்லியம்சன் 50, ரச்சின் ரவீந்திரா 2ரன்னுடன் 2வது இன்னிங்சை தொடர்ந்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கேன் வில்லியம்சன் நீண்ட நாட்களுக்கு பிறகு சதம் விளாசினார். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 111 ரன் குவித்தனர். ரவீந்திரா 44 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டேரில் மிட்செல் 60, சான்ட்னர் 49 என அடுத்தடுத்து ரன் குவிக்க நியூசி ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இடையில் வில்லியம்சன் 156 ரன் குவித்து ஆட்டமிழந்தார். அதனால் 2வது இன்னிங்சில் 101.4 ஓவரில் 453ரன் குவித்து ஆட்டமிழந்தது.

டாம் பிளெண்டல் 44 ரன்னுடன் களத்தில் நின்றார். இங்கி தரப்பில் ஜேகப் பெதேல் 3, சோயிப் பஷீர், கேப்டன் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அதனையடுத்து 658 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கியது இங்கி. அதன் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாக் கிரெவ்லி 5, பென் டக்கெட் 4 ரன்னில் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றமளித்தனர். அடுத்த ஓவரில் 3வது நாள் ஆட்டம் முடிவுக்கு வர இங்கி. 6 ஓவரில் 2விக்கெட் இழந்து 18ரன் எடுந்திருந்தது. இன்னும் 2 நாட்கள், 8 விக்கெட்கள் கைவசம் இருக்க 640 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து 4வது நாளான இன்று களம் காண இருக்கிறது. களத்தில் உள்ள ஜேகப் பெதேல் 9, ஜோ ரூட் 0 ரன்னுடன் 2வது இன்னிங்சை தொடர்கின்றனர்.

The post 3வது டெஸ்டில் வெற்றிக்கு இலக்கு 658 ரன்: தோல்வி வலையில் சிக்கிய இங்கிலாந்து.! வெற்றி மீனுக்கு காத்திருக்கும் நியூசிலாந்து appeared first on Dinakaran.

Related Stories: