மழை போய் வெயில் வந்ததால் திருச்செந்தூர் முருகன் கோயில் கடலில் நீராட அனுமதி

திருச்செந்தூர்: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் பல இடங்களில் சாலைகளில் வெள்ளநீர் சென்றதால் மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையும், நெல்லையில் இருந்து வைகுண்டம் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையும். ஏரல் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையும் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால் நேற்று காலை பாதைகள் சீராகி வாகனங்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டன.

மழை மற்றும் வெள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு நேற்று முன்தினம் (14ம் தேதியும்) நேற்றும் (15ம் தேதியும்) வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவதை தவிர்க்குமாறு கலெக்டர் இளம்பகவத் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தியிருந்தார். மேலும் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கடலில் நீராடவும் கடற்கரையில் இரவு தங்கிடவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் மக்களின்றி கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

நேற்று காலை மழை போய் வெயில் அடித்து இயல்பு நிலை வந்ததையடுத்து நேற்று காலை 9.30 மணிக்கு பிறகு கடலில் நீராட பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இதுகுறித்து தெரியவந்ததும் ஆர்வத்துடன் திரண்டு வந்த பக்தர்கள் கடலில் புனித நீராடியபிறகு கோயிலுக்கு சென்று காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் வழக்கம் போல் ரயில்கள் இயங்கியதால் ரயிலிலும் ஏராளமான பக்தர்கள் வந்து கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு சுவாமி தரிசனம்
செய்தனர்.

* ஜன. 13ல் ஆருத்ரா தரிசனம்

மார்கழி மாதத்தின் முக்கிய விழாவான ஆருத்ரா தரிசனம் வருகின்ற ஜன. (13) தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு திருச்செந்தூர் திருக்கோயிலில் அதிகாலை 2 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 2.30 மணிக்கு விஸ்வரூபம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது. இதே போல டிச. 28 மற்றும் ஜன. 11ம் தேதி பிரதோஷ கால அபிேஷகம் பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறுகிறது.

The post மழை போய் வெயில் வந்ததால் திருச்செந்தூர் முருகன் கோயில் கடலில் நீராட அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: