அதுபோல நேற்று மதியம் பல்லடத்தில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு திருப்பூர் வந்த தனியார் நகர பஸ்சும், முருகம்பாளையம் வழியாக மத்திய பஸ் நிலையத்திற்கு பயணிகளை ஏற்றி வந்த மினி பஸ்சும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு வேகமாக இயக்கப்பட்டன. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் மட்டுமல்லாது சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் அச்சமடைந்தனர். மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக 2 பஸ்களும் போட்டிப்போட்டு வந்த நிலையில் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மினி பஸ்சின் முன்பக்கம் மற்றும் பின்பக்கங்களில் சேதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆத்திரமடைந்து 2 பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களையும் எச்சரித்தனர். இந்த நிலையில் பஸ்கள் மோதியதும் 2 பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் பஸ்களை நடுரோட்டில் நிறுத்திவிட்டு இறங்கி தகராறில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகளும் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் அவதியடைந்தனர். பின்னர் அவர்கள் அவசரப்படுத்தியதை தொடர்ந்து 2 பஸ் டிரைவர்களும் மத்திய பஸ் நிலையம் நோக்கி பஸ்களை இயக்கினர்.
விடுமுறை நாட்களில் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய வகையில் அதிவேகத்தில் இயக்கக்கூடிய பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பதோடு இதுபோன்று இயக்கக்கூடாது என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதேநேரம் மினி பஸ்கள் விடுமுறை நாட்களில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் இருந்து மாற்று வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருவதையும் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
The post தனியார் டவுன் பஸ்கள் மோதி விபத்து; டிரைவர்கள் தகராறு: திருப்பூரில் பயணிகள் பரிதவிப்பு appeared first on Dinakaran.