பழநி: பழநியில் வனத்துறையால் அமைக்கப்பட்ட மூலிகைப்பூங்கா பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் உள்ள முருகன் சிலை போகர் எனும் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. இச்சிலையின் மீது அபிஷேகம் செய்யப்படும் பொருட்கள் அருந்தினால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. பழநி பகுதியில் போகர் மட்டுமின்றி ஏராளமான சித்தர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் பழநி மலைப்பகுதியில் உள்ள மூலிகைச் செடிகளைக் கொண்டு பல்வேறு வகையான நோய்களுக்கு மருந்து வழங்கி உள்ளனர்.
மூலிகைச் செடியின் பயன்பாட்டினால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அழியும் நிலையில் உள்ள மூலிகை தாவரங்களை பாதுகாக்கவும் தமிழக அரசின் சார்பில் வனத்துறையால் பழநி-உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் வையாபுரிக்குள மறுகால் அருகே சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 10 லட்சத்திற்கு மேல் செலவிட்டு மூலிகைப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில் வயிற்றுப்புண் துவங்கி, தொழுநோய், இதய நோய் மற்றும் புற்றுநோய் வரை ஏராளமான நோய்களை குணப்படுத்தும் அத்தி, கல்இச்சி, இலந்தை, சாரக்கொண்ணை, பூவரசு, எலுமிச்சை, அகத்தி, பெரியாநங்கை, தூதுவலை, வெண்குண்டுமணி, செம்பருத்தி, முயல்காதிலை, நீல நொச்சி, ஆடாதொடை உட்பட செடிகள், மரங்கள், கொடிகள் என 75 வகை நடவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், வையாபுரி குளக்கரையில் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. பூங்காவை பாதுகாக்கும் வகையில் இரும்புக்கதவுகள், சுற்றுவேலிகள், குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், மூலிகைகளையும், அதன் மருத்துவ குணங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் ஆங்காங்கே விளக்க பலகைகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. பூங்காவில் பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி என்றும் வனத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூங்கா திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், இதுவரை பார்வையாளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. பூங்காவின் பயனை உணர்ந்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பழநி மூலிகை பூங்கா பயன்பாட்டிற்கு வருமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.