இம்பால்: மணிப்பூரில் மர்ம நபர்களால் 2 பீகார் மாநில தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், ஆயுத போராளி ஒருவன் பலியானார். பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டம் ராஜ்வாஹி கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சுனேலால் குமார், தசரத் குமார் ஆகியோர் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட காக்ச்சிங்-வபாகாய் சாலையில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் வழியாக சென்று கொண்டிருந்த போது, அவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்களை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்னதாக, மணிப்பூர் தவுபால் மாவட்டம் சலுங்பாம் மானிங் லெகாயில் சந்தேகத்திற்கிடமான தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ஆயுத போராளி ஒருவனை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட ஆயுத போராளியின் வயது 16 என்றும், அவரது பெயர் லைஷ்ரம் பிரியம் என்றும் போலீசார் கூறினர். அவரிடம் இருந்து மூன்று இன்சாஸ் துப்பாக்கிகள், வெடிமருந்துகளை போலீசார் மீட்டனர். ஒரு காரையும் பறிமுதல் செய்தனர். அப்பகுதியில் பதற்றம் நீடிப்பதால் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
600 நாட்களை கடந்த வன்முறை
மணிப்பூரில் கடந்த 19 மாதங்களாக வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த வன்முறை சம்பவங்கள் எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை. கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து அச்சதுடன் வாழ்ந்து வருகின்றனர். மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட வன்முறை கடந்தாண்டு மே 3ம் தேதி தொடங்கியது. இன்றைய நிலையில் 600 நாட்களை கடந்துவிட்டது. இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டபோது, ‘மணிப்பூரில் நடந்து வரும் வன்முறையானது ஒரு இன மோதல். அதற்கும் மதத்துக்கும் தீவிரவாதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதை நான் ஒரு சாக்காகச் சொல்லவில்லை. அதன் பின்னணியாகச் சொல்கிறேன். மணிப்பூரில் இன வன்முறை ஏற்பட்ட போதெல்லாம், அது ஒன்றரை ஆண்டுகள் வரை நீடித்துள்ளது. சில நேரங்களில் மூன்று ஆண்டுகள் வரை கூட நீடித்தது. இருப்பினும், தற்போது வன்முறை குறைந்துள்ளது. நிலைமை படிப்படியாக மேம்பட்டு வருகிறது’ என்றார்.
The post பீகார் தொழிலாளர்கள் 2 பேர் மணிப்பூரில் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.